மலையகத்தில் வீட்டு திட்டத்துக்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்தாலும் பெருந்தோட்ட கம்பனிகள் அதற்கு எதிராகவே செயற்படுகின்றன. காணி வழங்கலுக்கான நடவடிக்கைளை கம்பனிகள் மேற்கொள்ளும் போது பாரியதொரு தாமதம் நிலவும் அதன் பின்னர்  குறித்த வீட்டுத்திட்டம் காலாவதியாகிவிடும். பெருந்தோட்ட பகுதிகளில் மக்கள் வாழும் இடங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அப்போது அபிவிருத்தி திட்டங்களை நேரடியாக முன்னெடுக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின்போது நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை  தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மலையக பகுதிகளில் தோட்ட நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்படும் அடாவடித்தன செயற்பாடுகள்  தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வில் பேசப்பட்டது. நாங்களும் பல விடயங்களை முன்வைத்தோம். ஆளும் கட்சியில் உள்ள  மலையக பிரதிநிதிகளும் இந்த விடயம் தொடர்பில் பேசினார்கள்.

தோட்ட நிர்வாகத்தினரின் அடாவடித்தனம்   மற்றும் மலையகத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.  இந்த சந்திப்பு எதிர்வரும் வாரம் நடத்தப்படும் என்று அத்தியாவசிய சேவைகள் அலுவலகத்தின் ஆணையாளர் நாயகம்  குறிப்பிட்டிருந்தார். ஆனால்  அந்த சந்திப்பு புதன்கிழமை (20) நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் ஆளும் தரப்பில் உள்ள மலையக பிரதிநிதிகளுக்கு  போதுமான தெளிவு உள்ளதா என்பது  தெரியவில்லை. மலையகத்தில் வீட்டுப்பிரச்சினை உள்ளது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் 9 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது 2080 வீடுகள் மாத்திரமே  அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்குரிய காணி விடுவிக்கப்படவில்லை.

வீட்டு திட்டத்துக்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்தாலும் பெருந்தோட்ட கம்பனிகள் அதற்கு எதிராகவே செயற்படுகின்றன. காணி வழங்கலுக்கான நடவடிக்கைளை கம்பனிகள் மேற்கொள்ளும் போது பாரியதொரு தாமதம் நிலவும் அதன் பின்னர்  குறித்த வீட்டுத் திட்டம் காலாவதியாகிவிடும். பெருந்தோட்ட பகுதிகளில் மக்கள் வாழும் இடங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அப்போது அபிவிருத்தி திட்டங்களை நேரடியாக முன்னெடுக்க முடியும்.

அரகலயவின் போது  ராஜபக்ஷர்களுக்கு எதிராக வெறுப்பு  பிரச்சாரங்கள்  கட்டவிழ்த்து விடப்பட்டன. மலையகத்திலும் தொண்டமான் குடும்பத்துக்கு எதிராகவும் அவ்வாறான தன்மையே காணப்பட்டது.  தொண்டமான் குடும்பம் மலையகத்துக்கு ஏதும் சேவை செய்யவில்லை என்று  எவ்வாறு குறிப்பிடுவது.

காலஞ்சென்ற சௌமிய மூர்த்தி தொண்டமான் மலையகத்துக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார். குடியுரிமையை பெற்றுக்கொடுத்தார். தமது அரசியல் இயலாமையை மறைத்துக் கொள்வதற்கு உண்மையான சேவையை மலினப்படுத்த வேண்டாம் என்று  ஆளும் தரப்பில் உள்ள மலையக பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.