பாராளுமன்றத்தின் அனுமதியின்றி மாகாண சபைத் தேர்தலுக்கான நிதியை அரசாங்கம் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது. பாராளுமன்ற விவகாரங்களில் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலையிடுவது முற்றிலும் தவறானது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு 159 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலம் இருந்தாலும், சட்டபூர்வமான பாராளுமன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு தனித்துவமான வழிமுறை இருப்பதாக நான் நினைக்கிறேன். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் போன்ற உத்தியோகபூர்வ பதவிகள் சிலருக்கு இல்லாவிட்டாலும், அவர்கள் கட்சியின் பதவிகளை வகித்தால், அவர்களுக்கு அரசாங்கத்தின் செயல்பாடுகளில் தலையிடுவதற்கான உரிமை இருக்கிறது என்றே அவர்களின் கட்டமைப்பு அமைந்திருக்கிறது. அது அவர்களின் கட்சியின் உள்வட்டாரப் பிரச்சினை, அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அது அவர்களின் செயல்பாட்டு முறை என்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால், டில்வின் சில்வா யாழ்ப்பாணத்திற்குச் சென்று, மாகாண சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியைத் தற்போது நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். அதுதான் முற்றிலும் தவறானதாகும். அதனை அவர் அவ்வாறு கூற முடியாது. ஏனெனில், பாராளுமன்றத்தினால் விசேடமாக ஒதுக்கப்பட்ட ஒரு நிதியை மாற்றுவதானால், அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும். பாராளுமன்றத்தை அலட்சியம் செய்துவிட்டு, பாராளுமன்ற விவகாரங்களில் அவர் தலையிட்டுப் பேசியிருப்பது தவறான செயலாகும்.

அவர் நிழல் ஜனாதிபதியா, இரண்டாவது ஜனாதிபதியா அல்லது பிரதமரா என்பது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. அது ஜே.வி.பி.யின் உள்நாட்டு ஒழுங்குமுறை என்பதால் அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஆனால், அவர்களுக்கு பாராளுமன்றத்தில் 159 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலம் இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட தேவைக்காக விசேடமாக ஒதுக்கப்பட்ட நிதியை மாற்றுவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். அவர் செய்திருப்பது தவறான ஒரு காரியம் என்பதால், இதனை இனிமேல் செய்ய வேண்டாம் என்று அவருக்குக் கூற விரும்புகிறேன். இது தொடர்பாக, பொது நிதி பற்றிய குழுவின் தலைவரான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு நான் ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளேன். இந்த விவகாரத்தை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு முழுமையான விபரங்களை வழங்குமாறு அவரிடம் கேட்டுள்ளேன்.


 
அதேபோல், மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திலாவது நடத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் காணப்படுகிறது. தேர்தலை ஏன் நடத்தாமல் இருக்கிறார்கள் என்று தேசிய மக்கள் சக்தியிடம்தான் கேட்க வேண்டும். ஏனெனில், பாராளுமன்றத்தில் தேர்தல் முறைமை குறித்து ஆராயும் தெரிவுக் குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருக்கிறேன். நாங்கள் கூறுவது என்னவென்றால், தேர்தலை இனிமேலும் தாமதப்படுத்த வேண்டாம், பழைய முறைமையின் கீழாவது உடனடியாக தேர்தலை நடத்தி முடிப்போம் என்பதாகும். தேர்தலை நடத்திய பின்னர் புதிய முறைமைகள் குறித்து குழுக்கள் மூலம் ஆராயலாம். தேர்தலை நடத்த வேண்டுமாயின், பழைய முறைமைதான் மிகவும் எளிதானது. அதை விடுத்து புதிய முறைமைகளை இப்போது தேடப் போனால் அது இழுபறியாகவே முடியும் என்றார்.