மினிப்பே பிரதேச வயல்களில் வைக்கோலுக்கு தீ வைக்கும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் இந்திக உடவத்த தெரிவித்தார். 

நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் வரும் விவசாயிகளது கூட்டம் அண்மையில் மினிப்பே பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (6) நடைபெற்றது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

அவர் இது பற்றி மேலும் கூறுகையில்,

மினிப்பே நீர்ப்பாசன திட்டப் பகுதியில் புகையிலை பயிர்ச்செய்கை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், வயல்களில் புகையிலை பயிரிடக்கூடாது என்றும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதை முற்றாக இடைநிறுத்தவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

மினிப்பே பாரிய நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் அடுத்த பெரும் போகத்துக்கான நீர் விநியோகப் பணிகள்  இம்மாதம் 10ஆம் திகதி மினிப்பே  அணைக்கட்டிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுமார் 19,735 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில்  நான்கு கட்டங்களாக நெற்செய்கைக்கு நீர் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், சட்டப்பூர்வ நிலங்களுக்கு மட்டுமே இந்த நீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் கூறுனார். 

கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் இந்திக உடவத்த மற்றும் மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபர் பிரசன்ன மதநாயக்க ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.