முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையக சேவை கடந்த மூன்று ஆண்டுகளாக முற்றாக செயலிழந்துள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய சேவைத் தேவையை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை (31) அனுப்பியுள்ள விரிவான கடிதத்தில், இலங்கை முழுவதும் 1,420 அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையகங்கள் இயங்கும் நிலையில், புவியியல் ரீதியாக பரந்த பரப்பைக் கொண்ட ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட கலையகம் மட்டுமே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அந்த ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட கலையகம் கூட கடந்த மூன்று ஆண்டுகளாக சேவையாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, மாவட்ட மக்களை முற்றாக இச்சேவையிலிருந்து விலக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கலையகத்தின் உரிமையாளர் கடந்த மூன்று ஆண்டுகளாக திணைக்களத்துக்கு பல முறை மின்னஞ்சல் மூலம் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக உதவிகளை கோரி விண்ணப்பித்தும், இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என தகவல் கிடைத்துள்ளதாகவும், இதன் விளைவாக கலையகத்தின் அங்கீகரிக்கப்பட்ட சேவையை மீள ஆரம்பிக்க முடியாமல் உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு விண்ணப்பத்துக்குத் தேவையான இலத்திரனியல் புகைப்படம் அங்கீகரிக்கப்பட்ட கலையகங்கள் ஊடாக மட்டுமே திணைக்களத்தின் கணினி முறைமைக்கு அனுப்பப்பட வேண்டியிருப்பதால், முல்லைத்தீவு மக்கள் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு பயணிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், இதனால் கூடுதல் பயணச் செலவு, கால விரயம் மற்றும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, குறைந்த வருமானக் குடும்பங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வாழும் மக்கள் இந்த நிலைமையால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கடந்த மூன்று ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அந்த ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட சேவையை மீள ஆரம்பிக்க தேவையான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக உதவிகளை வழங்குமாறும், மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் குறைந்தபட்சம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையகமாவது இயங்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக திணைக்களம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தனது அலுவலகத்திற்கு விரைவாக அறிவிக்குமாறும் ரவிகரன் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.









அக்கடிதம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்றி அலுவல்கள் அமைச்சர், குறித்த அமைச்சின் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்டோருக்கும் பிரதிகளாக அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.