முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்து வரும் யானை–மனித மோதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக மூன்று காட்டு யானைக் கட்டுப்பாட்டு அலகுகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு உடனடி இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், சுற்றாடல் அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு, கேப்பாபிலவு–புலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு–கோம்பாவில் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ச்சியாகக் குடியிருப்புகளுக்கும் விளைநிலங்களுக்கும் நுழைந்து வருகின்றன. இதனால் வீடுகள், விவசாய விளைபொருட்கள் மற்றும் தென்னை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைவதுடன், மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடைபெற்ற பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், 2027 ஆம் ஆண்டில் இப்பகுதிகளில் யானை வேலி அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. எனினும், வேலி அமைக்கப்படும் வரை மக்களுக்கு உடனடிப் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் அவசரத் தொடர்பு வசதிகளை ஏற்படுத்துமாறு கோரி, ரவிகரன் எம்.பி. கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
பாராளுமன்றச் செயலகத்தினூடாக அனுப்பப்பட்ட பிரேரணைக்குப் பதிலளித்துள்ள வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் பின்வரும் நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது:
மின்வேலிகள் அமைக்கப்படும் வரை, பிரதேச செயலாளர்களினூடாகத் தகுந்த கிராமக் குழுக்களை அடையாளம் கண்டு, அவர்களை வனசீவராசிகள் அலுவலர்களுடன் இணைத்துச் செயற்படுத்தல்.
யானைகளை விரட்டுவதற்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சிகளைக் கிராமக் குழு உறுப்பினர்களுக்கு வழங்குவதுடன், தேவையான அளவு யானை விரட்டும் வெடிகளை விநியோகித்தல்.
கட்டுப்பாட்டு அலகுகள்: யானை–மனித மோதல் முகாமைத்துவத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று காட்டு யானைக் கட்டுப்பாட்டு அலகுகளை நிறுவுதல்.
சமூகத்தின் நேரடிப் பங்கேற்புடன் கூடிய இத்தகைய கூட்டுச் செயற்பாடுகளினூடாக, உள்ளூர் மட்டத்தில் யானை–மனித மோதலைத் திறம்படக் கையாள முடியும் என வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.