முல்லைத்தீவு முள்ளியவளையில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வுக்கு பொலிஸார் இடையூறு விளைவித்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முள்ளியவளை வடக்கு பொதுநோக்கு மண்டபத்தில் இன்று (25) புதன்கிழமை காலை 10.30 மணியளவில் குறித்த மதிப்பளிப்பு நிகழ்வை நடத்துவதற்கு முள்ளியவளை வடக்கு கிராம மக்களால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதன்போது, அங்கு வருகை தந்த முள்ளியவளை பொலிஸார், நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் யார் எனக் கேள்வி எழுப்பியதுடன், நிகழ்வை முன்னெடுப்பவர்களின் பெயர் விபரங்களையும் பதிவு செய்துள்ளனர்.
அத்துடன், நிகழ்வுக்காக மண்டபத்தின் முன்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகையில் இடம்பெற்றிருந்த கார்த்திகை மலரை மறைக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியதுடன், அப்பகுதியில் தொடர்ந்து நின்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வருடாவருடம் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு இப்பகுதியில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இதுவரை இவ்வாறான இடையூறுகள் ஏற்படுத்தப்படவில்லை என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வருடம் நிகழ்வுக்கான ஏற்பாடுகளின்போது பொலிஸார் தலையிட்டு கட்டுப்பாடுகளை விதித்தமை தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தியும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
மேலும் கண்டறிக
செய்திகள் வாசி
விசேட கட்டுரைகள்
நாளிதழ் சந்தா




