அதன்பின் இன்று வரையிலான 33 ஆண்டுகளில் மகளிர் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்க பல்வேறு தருணங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை வெற்றி பெறவே இல்லை. எண்ணற்ற தருணங்களில் இந்த முயற்சியைக் கூட்டணி வைத்து முறியடித்தது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான்.
சமூக நீதிக்கு எதிரான டி.என்.ஏ கொண்டவர்களின் குணமும், நடத்தையும் எந்தக் காலத்திலும் மாறாது என்பதற்கு எடுத்தக்காட்டாகத் தான் கடந்த காலங்களில் மகளிர் இட ஒதுக்கீட்டை முறியடித்த திமுகவும், காங்கிரஸ் கட்சியும் இப்போதும் தங்களின் சமூக அநீதி சாகசத்தை மீண்டும் ஒருமுறை அரங்கேற்றியுள்ளன.
தமிழ்நாட்டில் பெண்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற 5 பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட 40 மக்களவை உறுப்பினர்களும் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்து சமூகநீதி படுகொலை செய்திருப்பதை ஏற்க முடியாது.
மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வாக்களிப்பதற்கு எந்தவொரு நியாயமான காரணங்களும் இல்லை. மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்படும் என்று அறிவிப்பு வெளியான நாள் முதலாகவே, இதற்கு எதிராக மு.க.ஸ்டாலின் மூகாரி இராகம் தான் பாடி வந்தார்.
முதலில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விடும் என்று குற்றஞ்சாட்டினார்.
ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும், அனைத்து மாநிலங்களையும் போலவே தமிழ்நாட்டிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 50% உயர்த்தப்பட்டு 59 இடங்களாக அதிகரிக்கும் என்று நானும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் உறுதியளித்த நிலையில், அதையெல்லாம் ஏற்க முடியாது; இதற்கான உத்தரவாதத்தை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வழங்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்.