தெதுரு ஓயா உட்பட மூன்று முக்கிய ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்காக விடுக்கப்பட்டிருந்த வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை அறிவித்தலை நீக்க நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தெதுரு ஓயா, கலா ஓயா மற்றும் நில்வளா கங்கை ஆகிய ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதிகளை மையப்படுத்தி விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கைகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.
குறித்த ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் நீர் மட்டம் தற்போது சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளதன் காரணமாகவே இந்த வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை அறிவித்தல் நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் மழைவீழ்ச்சி நிலைமைக்கு ஏற்ப நதிகளின் நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தொடர்ந்து அவதானித்து வருகின்றது.
எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏதேனும் ஏற்படுமாயின், அது தொடர்பில் முன்அறிவிப்புகளை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.