சர்வதேச அரசியல் களத்தில் யாருக்கும் அடிபணியாத ஒரு சுயசார்பு சக்தியாக ‘இந்தியா’ உருவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கணிக்க முடியாத வணிகக் கட்டுப்பாடுகளும், வரி கெடுபிடிகளும் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் இந்தத் தன்னிச்சையான வரி கெடுபிடிகள், இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.இந்த நிதி நிலையற்ற தன்மையைக் குறைக்க, இந்தியப் பொருளாதாரம் தனது ஏற்றுமதிச் சந்தைகளைப் பன்முகப்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிபர் ட்ரம்ப்பின் ‘அமெரிக்க முதன்மை’ கொள்கை ஏற்படுத்திய அதிர்வுகளால், பிரதமர் நரேந்திர மோடி ‘ஹெட்ஜிங்’ (Hedging) எனப்படும் ‘ஆபத்தைக் குறைக்கும் யுத்தி’யைக் கையாளத் தொடங்கியுள்ளார் என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் சர்வதேச நாளேடான ‘தி நியூயார்க் டைம்ஸ்’ சிறப்பு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.அமெரிக்கா முக்கியமானது; ஆனால், அதை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. அமெரிக்காவை மட்டுமே முழுமையாகச் சார்ந்து இருக்காமல் ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் கைகோப்பதன் மூலம், அமெரிக்க வரி விதிப்புகளால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பை இந்தியா முன்கூட்டியே தடுத்து வருகிறது.உலகப் பொருளாதார நிலையின்மையில் இலிருந்து இந்தியாவைக் காக்கும் ஒரு ராஜதந்திரப் பிரதமராக மோடி செயல்படுகிறார். இதற்காகவே, அவர் உலக நாடுகளுடன் தனித்தனி ஒப்பந்தங்களைச் செய்து இந்தியாவின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்து வருகிறார்.‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு குறிப்பிடுகையில், ‘பிரதமர் மோடி கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறைந்தபட்சம் 20 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். இந்தச் சுற்றுப் பயணங்கள் முக்கியமாக உறுதியான பொருளாதார, ராஜதந்திர ரீதியிலான முடிவுகளையும் ஒப்பந்தங்களையும் பெறுவதாகவே அமைந்திருந்தன. அதிபர் ட்ரம்ப் அவ்வப்போது கட்டவிழ்த்துவிடும் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் பரந்த புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, தனது நட்பு நாடுகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்த இந்தியா முயன்று வருகிறது’ என்று தெரிவித்துள்ளது.பிரதமர் மோடி சமீபத்தில் கிர்கிஸ்தான் நாட்டுக்கு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்தபோது, இந்த ஆய்வுக் கட்டுரையை அந்நாளேடு வெளியிட்டிருந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரையும் சந்தித்துப் பேசியது உலக அரசியலில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.உறுதியான பொருளாதாரப் பலன்கள்‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேட்டுக்கு மகாராஷ்டிர அரசின் ‘எதிர்காலப் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தின்’ நிர்வாக இயக்குநர் பிரியம் காந்தி அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் சென்ற பயணங்கள் மூலம் உறுதியான பொருளாதாரப் பலன்கள் இந்தியாவுக்குக் கிடைத்து இருக்கின்றன.குறிப்பாக, ஜெர்மனியுடன் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பக் கூட்டு, பிரான்ஸில் மாணவர்களுக்கு விசா எளிதாகக் கிடைக்க முயற்சி, இந்தியா - பிரிட்டன் ஒப்பந்தத்தால் ஸ்காட்ச் விஸ்கி மீதான வரிக்குறைப்பு ஆகியவை நடந்துள்ளன. நமது பொருளாதாரத்தின் அளவு வளரும்போது, உலகின் பிறநாடுகளுடன் சிறந்த உறவுகளை வளர்க்க விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.இந்தியா ‘பலதரப்பு’ (Plurilateral) அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட இலக்கு எட்டப்படும் வரை, சிறிய மற்றும் துல்லியமாக வரையறுக்கப்பட்ட இலக்குகளை வைத்துக்கொண்டு, குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளுடன் இணைந்து செயல்படும் முறை இதுவாகும்.நடுத்தர வல்லரசுகளுடன் கைகோத்தல்‘நடுத்தர வல்லரசுகள்’ என்று சொல்லப்படும் பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள், இந்தியா எதிர்கொள்ளும் அதே சூழல்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருபெரும் வல்லரசுகளுக்கு இடையிலான மோதலில் சிக்காமல் இருக்க, இந்தியா ‘நடுத்தர வல்லரசுகளுடன்’ தன் உறவை வலுப்படுத்தி வருகிறது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் திடீர் கொள்கை மாற்றங்களால் ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் இந்தியாவைப் போலவே பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன. இந்த நாடுகளுடன் இணைந்து ‘விநியோக சங்கிலி’யை (Supply Chain) உருவாக்குவதன் மூலம், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் ஆதிக்கத்தையும் ஒரே நேரத்தில் இந்தியா சமாளிக்கிறது.பிரதமர் மோடியின் அணுகுமுறையால், நடுத்தர வல்லரசுகளை முடக்கும் சில சக்திகள் இந்தியாவுக்குச் சாதகமாகச் செயல்படத் தயாராக உள்ளன. இதற்குக் காரணம், இந்தியாவின், மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரச் சந்தையை அணுகவும், தங்கள் சொந்த ராஜதந்திரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உலகத் தலைவர்கள், பிரதமர் மோடியை நாடி வருவதாக அந்தச் செய்தி தெரிவித்துள்ளது.இந்தியா மீது 25% வரிரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது உக்ரைன் மீதான போருக்கு நிதியுதவி அளிப்பதாகக் கூறி, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியை அதிபர் ட்ரம்ப் விதித்தார்.இந்தியாவின் உள்நாட்டுத் தொழிலைப் பாதுகாக்கும் பொருளாதாரக் கொள்கையை ட்ரம்ப் நிர்வாகம் விமர்சித்தது. ஆனால், இந்தியா சற்றும் தளரவில்லை; அதன் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் வெளிப்படத் தொடங்கின என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு தெரிவித்துள்ளது. இந்தியாவின் மனமாற்றம் பின்னணிமுதல்முறை அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இருந்தபோது, பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் அவர் நட்புறவு வைத்திருந்தார். ஆனால், 2025-ம் ஆண்டு மே மாதத்தில் இந்தியா - பாகிஸ்தான் நடந்த 4 நாள் போரை அவர்தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவந்ததை அடுத்து, மத்தியில் ஆளும் பாஜக அரசின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது.இந்தியாவின் மிகப் பெரிய ஒற்றை ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா இருந்து வருவதால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பைக் குறைக்க இந்தியா அடுத்தகட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது.இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவைக் கட்டுப்படுத்த விரும்பும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடனான உறவுகளை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. இதற்காக, புதிய நட்பு நாடுகளை அரவணைக்கும் முயற்சியை இந்தியா விரிவுபடுத்தியுள்ளது.இதனிடையே, அமெரிக்கா - ஈரான் போர் இந்தியாவின் இந்த முயற்சியை மேலும் விரைவுபடுத்தும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருவதால், மாற்றுப் போக்குவரத்துப் பாதைகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது என ‘தி நியூயார்க் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.பயணச் செலவும் அந்நிய நேரடி முதலீடும்பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காகக் கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசு ரூ.550 கோடி செலவிட்டுள்ளதாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2025-ம் ஆண்டில் பிரதமர் மோடி அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜப்பான் உள்ளிட்ட 23 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்; இதற்காக ரூ.180 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது. 2026-ம் ஆண்டில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக இதுவரை ரூ.74.58 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கரிட்டா தெரிவித்துள்ளார். இதில் சமீபத்தில் பிரதமர் மோடி மத்திய ஆசிய நாடுகளுக்குச் சென்ற செலவு குறிப்பிடப்படவில்லை. போத்தி ராஜ்.க