யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் நாயன்மார்கட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட  860 போதை மாத்திரைகள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் யாழ். பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து நேற்று திங்கட்கிழமை (5) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஓட்டமாவடி, சங்கானை, நல்லூர் மற்றும் கொய்யாத்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த  22 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், போதை மாத்திரைகள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.