யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளராக, வவுனியா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நடராஜா இராஜவிசாகன் (Nadarajah Rajavisahan) 2026 ஒக்டோபர் 9ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் வி. காண்டீபன் 2026 ஒக்டோபர் 8ஆம் திகதி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகத்தில் 2027 நவம்பர் 2ஆம் திகதி வரை விடுமுறை அனுமதி பெற்றுள்ள நடராஜா இராஜவிசாகன், அவரது விடுமுறை நிறைவடையும் வரை அல்லது நிரந்தரப் பதிவாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஒப்பந்த அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளராகக் கடமையாற்றுவதற்குப் பல்கலைக்கழகப் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞானப் பட்டதாரியான இவர், அப்பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் மற்றும் பிரதிப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் பணியாற்றியுள்ளார். பின்னர், வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், 2021 ஜூலை 26ஆம் திகதி முதல் அப்பதவியில் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.