யாழ்ப்பாண மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டில் அரச சார்பற்ற நிறுவனங்களால் சுமார் 1,005 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடாகச் சுமார் 4,500 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதிபன் தெரிவித்தார்.

சிவில் சமூக அமைப்புகளின் செயற்பாடுகளை முன்னேற்றுவதன் மூலம் கொள்கை ஊக்குவித்தல் மற்றும் உரிமைகளைப் பாதுகாத்தல்  நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாண மாவட்டப் பங்குதாரர்களுக்கான வழிகாட்டல் கலந்துரையாடல் கிரிசலிஸ்  நிறுவனத்தின் பிராந்திய மற்றும் திட்ட முகாமையாளர் தனியார் மண்டபமொன்றில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுப் போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசாங்கத்தின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச நிர்வாகம் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டில் அரச சார்பற்ற நிறுவனங்களால் சுமார் 1,005 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடாகச் சுமார் 4,500 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்

மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தியில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களில் காணப்படும் இடைவெளிகளைக் குறைப்பதற்கு இந்நிறுவனங்களின் வளங்களையும் ஒத்துழைப்பையும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகளின் பயன்களை மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

பசுக்கள், கோழிக்குஞ்சுகள் மற்றும் தையல் இயந்திரங்கள் போன்ற உதவிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றின் மூலம் நிலையான உற்பத்தி அதிகரிப்பு மற்றும் பொருளாதாரத் தன்னிறைவு எந்தளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும் .

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், மக்களின் வாழ்வாதாரத்தை நிலையான முறையில் மேம்படுத்துவதற்கும் மாவட்டச் செயலகமும் பிரதேச செயலகங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Chrysalis நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட 'ஊராட்சி முற்றம்' திட்டத்திற்காக 6.6 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு, 160 மில்லியன் ரூபாய் பெறுமதியான அடைவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், இத்திட்டத்தை முன்னெடுப்பதில் குடிசார் அமைப்புகள் ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டினார்.

காணி, வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்று முக்கிய துறைகளையும் மையப்படுத்தி, சமூக மட்ட அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.