மன்னாரில் உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையத்தை அமைப்பதற்காக ஜப்பான் அரசு சுமார் 32 மில்லியன் ரூபாயை மானியமாக வழங்குகிறது.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, 29ஆம் திகதி, ஜப்பானின் அடிமட்ட மனிதப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான மானிய உதவி திட்டத்தின் கீழ் (Grant Assistance for Grassroots Human Security Projects – GGP) இதற்கான மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
சிவனருள் ஹோப் (Sivanarul Hope) அமைப்பின் செயலாளர் சாட்குண்ணியமூர்த்தி கமலமூர்த்தியுடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்தத் திட்டத்திற்காக ஜப்பான் அரசு 97,371 அமெரிக்க டொலர்களை வழங்குகிறது. இதன் மூலம் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வதற்கான நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
தற்போது தமது வாழ்வாதாரத்திற்காக முதன்மைத் தொழில்களில் இருந்து கிடைக்கும் நிலையற்ற வருமானத்தில் தங்கியிருக்கும் பிராந்தியப் பெண்களுக்கு, உள்ளூர் பனை மரங்களிலிருந்து பெறப்படும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி கைவினைப் பொருட்களைத் தயாரிப்பதற்கான பயிற்சிகளும் திறன்களும் வழங்கப்படவுள்ளன.
இதன் மூலம் பெண்கள் நிலையான வருமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதுடன், அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தையும் வலுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான ஜப்பானின் அபிவிருத்தி உதவிகள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, தேசிய நல்லிணக்கத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இலங்கைக்கான ஜப்பானின் அபிவிருத்தி உதவியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகத் தெரிவித்த அவர், உட்கட்டமைப்பு, அடிப்படை மனிதத் தேவைகள், விவசாயம், மீன்பிடி, பெண்களை வலுவூட்டல் மற்றும் கண்ணிவெடி அகற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஜப்பான் தொடர்ந்து உதவி வழங்கி வருவதாகக் கூறினார்.
கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக மாத்திரம் ஜப்பான் இதுவரை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான உதவியை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மானிய உதவி குறித்து கருத்துத் தெரிவித்த சிவனருள் ஹோப் அமைப்பின் செயலாளர் சாட்குண்ணியமூர்த்தி கமலமூர்த்தி, ஜப்பான் அரசுக்கும் மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
இந்த மானியம் மன்னாரில் உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையத்தை நிறுவுவதற்கு உதவுவதுடன், ‘Palms Together’ திட்டத்தையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெண் கைவினைஞர்களுடன் முன்னெடுக்கப்படும் பணிகளையும் வலுப்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கிய ஜப்பான் தூதரகத்திற்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.
1989ஆம் ஆண்டு முதல் அடிமட்டத் திட்டங்களுக்கான மானிய உதவி (GGP) திட்டத்தின் ஊடாக ஜப்பான் இலங்கைக்கு மொத்தமாக 65 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்கியுள்ளது.