ரணில் - சஜித் அரசியல் கூட்டணி அரசாங்கத்துக்கு ஒரு சவாலல்ல, இவர்களின் வங்குரோத்து அரசியல் நிலைமையை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். பிணைமுறி மோசடியாளர்களுடன் எக்காரணிகளுக்காகவும் ஒன்றிணைய போவதில்லை என்று சஜித் பிரேமதாச தனது தந்தையின் உருவச்சிலைக்கு முன்பாக இருந்து சத்தியமளித்ததை மறந்து விட்டார் என தொழில் பிரதி அமைச்சர்  மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கம்பஹா பகுதியில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தெரிவித்ததாவது,

கடந்த ஆண்டு நாடு என்ற ரீதியில் எவ்வாறான நெருக்கடிகளை எதிர்க்கொண்டோம் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று எதிர்க்கட்சியினர் அரசியல் மேடைகளில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியினர் எவ்வித்திலும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

அரசாங்கத்தை எவ்வழியில் நெருக்கடிக்குள்ளாக்கலாம் என்றே எதிர்க்கட்சியினர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் ஒன்றிணைய போவதாக குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

ரணில் - சஜித் அரசியல் கூட்டணி எமக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையாது.இவர்களின் வங்குரோத்து அரசியலை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். பிணைமுறி மோசடியாளர்களுடன் எக்காரணிகளுக்காகவும் ஒன்றிணைய போவதில்லை என்று சஜித் பிரேமதாச தனது தந்தையின் உருவச்சிலைக்கு முன்பாக இருந்து சத்தியமளித்ததை மறந்து விட்டார்.

எதிர்க்கட்சிகளின் அரசியல் கூட்டணி ஒன்று தோற்றம் பெற்றால் அங்கு தலைமைத்துவத்துக்கு முரண்பாடு ஏற்படும்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எந்த அரசியல் கூட்டணி அமைத்தாலும்  அதன் தலைமைத்துவம் தனக்கே வேண்டும் என்றே ரணில் விக்கிரமசிங்க கருதுவார்.

அரசாங்கம் என்ற ரீதியில் சிறந்த முறையில் செயற்படுகிறோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய செயற்படுவோம். அனர்த்தத்தால் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து வெகுவிரைவில் மீண்டெழுவோம் என்றார்.