கொழும்பு கோட்டை - கண்டி புகையிரத சேவை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் முழுமையாக ஆரம்பிக்கப்படும். அதேபோல் ரம்புக்கனை - கண்டி புகையிரத சேவை இந்தாண்டு இறுதி பகுதியில் ஆரம்பிக்கப்படும் என  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது புதிய ஜனநாயக முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  அநுராத ஜயரத்ன  முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தித்வா புயல் தாக்கத்தை தொடர்ந்து கொழும்பிலிருந்து கண்டி மற்றும் நாவலப்பிட்டிவரை  புகையிரத சேவை பாதிக்கப்பட்டு சகல சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தித்வா சூறாவளி காரணமாக மலையக  புகையிரத பாதையில் 136 இடங்கள் சேதமடைந்தன.

சேதமடைந்த 136 இடங்களில்  122 இடங்களின் புனரமைப்பு பணிகள்  நிறைவடைந்துள்ளன. மிகுதியாகவுள்ள இடங்களை புனரமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை, புகையிரத திணைக்களம் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மலையக புகையிரத பாதைகளை புனரமைக்கும் போது கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்  ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கமைய புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மீண்டும் மண்சரிவு அபாய நிலை ஏற்படும் போது உருவாகும் பாதிப்புக்களை கருத்திற் கொண்டு புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

கொழும்பு கோட்டை - கண்டி புகையிரத சேவை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் முழுமையாக ஆரம்பிக்கப்படும். அதேபோல் ரம்புக்கனை - கண்டி புகையிரத சேவை இந்தாண்டு இறுதி பகுதியில் ஆரம்பிக்கப்படும்  என்றார்.