சென்னை விமான நிலைய ஓடு தளத்தில் மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்குவதைத் தடுக்க ரூ.22 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட மழைநீர் வடிகால் திட்டம், இந்திய விமான நிலைய ஆணையத்தின் நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் முடங்கியுள்ளது.
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, சென்னை விமான நிலையமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. விமான ஓடுதளத்தில் வெள்ளநீர் தேங்கியதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, விமான நிலைய வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் தேங்குவதைத் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, பல்லாவரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பெய்யும் மழையால் பெருக்கெடுக்கும் நீர், விமான ஓடுதளத்தில் உள்ள வடிகாலில் செல்ல முடியாமல் தேங்குவது முக்கியப் பிரச்சினையாக இருந்து வருகிறது.
இதற்குத் தீர்வு காணும் வகையில், மழை நீரை முறையாக வெளியேற்றி, அடையாறு ஆற்றில் கொண்டு சேர்க்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக விமான நிலையத்தை ஒட்டியுள்ள சாலையை வெட்டி, அதன் வழியாக மழைநீரைக் கொண்டு சென்று அடையாறு ஆற்றுடன் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.
இப்பணியைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விரிவான திட்ட மதிப்பீட்டைத் தயாரித்தனர்.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் திட்ட நிதியிலிருந்து தொகையை வழங்குவதற்காக ஆணையத்தின் உள்வட்டாரக் குழு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் தொழில்நுட்ப ரீதியாகத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தயாராக இருந்தும், நிதி ஒதுக்கீடு இல்லாததால் பணிகளை செயல்படுத்த முடியாமல் உள்ளது.
ஓடுதளத்தில் மழைநீர் தேங்குவது விமானங்களின் இயக்கத்தையும் பாதுகாப்பு நடைமுறைகளையும் பாதிக்கக்கூடும். இதனால் விமான சேவைகளில் தாமதம், விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு மாற்ற வேண்டிய நிலை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தற்போது சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மழைநீர் வடிகால் வசதியை மேம்படுத்துவதும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
எனவே ரூ.22 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் திட்டத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையம் விரைந்து நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து நீர்வளத் துறையினர் கூறியதாவது: சென்னை விமான நிலையத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதைத் தடுப்பதற்காக ரூ.22 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய விமான நிலைய ஆணையம் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
திட்டத்துக்கான நிதியை நீர்வளத் துறையின் வங்கிக் கணக்கில் செலுத்தினால், உடனடியாகப் பணிகளைத் தொடங்கிவிடுவோம். நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளன. எனவே, இந்திய விமான நிலைய ஆணையம்தான் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.