நாட்டின் தற்போதைய அபிவிருத்தி நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, வசதி குறைந்த வைத்திய பணிநிலையங்கள் தொடர்பான பட்டியலில் விசேட திருத்தங்களை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
யுத்தகாலப்பகுதியில் வட, கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிய வயித்தியர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட விசேட இடமாற்றச் சலுகையானது, 2020 ஆம் ஆண்டு முதல் விஞ்ஞானரீதியாக மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட புதிய வைத்தியசாலைப் பட்டியல் விரைவில் அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதால், குறைந்த வசதியுடைய சேவை நிலையங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
2020 ஆம் ஆண்டில் 407 ஆகக் காணப்பட்ட இத்தகைய வைத்தியசாலைகளின் எண்ணிக்கை, 2024 இல் 393 ஆகவும், 2026 ஆம் ஆண்டில் 265 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
குறைந்த வசதிகளை கொண்ட வைத்தியசாலையில் 2 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றும் வைத்தியர்கள் விசேட இடமாற்ற நடைமுறைக்கமைய பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள்.
திறமை அடிப்படையில் நியமிக்கப்படும் ஆரம்ப நிலை வைத்தியர் குழுவினருக்கே இத்திருத்தங்கள் பொருந்தும் என்பதுடன், பின்தங்கிய பகுதியில் உள்ள மக்களுக்கத் தடையின்றி சுகாதார சேவையை உறுதிப்படுத்துவது அவசியம் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.