முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், அவரது முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித ரம்புக்வெல்லவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 276 மில்லியன் ரூபா சொத்துக் குவிப்பு வழக்கில், இன்று (24) ரமித ரம்புக்வெல்லவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன.

மேற்படி வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் பணத்தை வைத்திருந்தமை தொடர்பில் ரமித ரம்புக்வெல்லவுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டப்பட்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அதற்கமைய இன்றைய தினம் வழக்கின் 2ஆவது மற்றும் 3ஆவது சாட்சியாளர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதன்போது, கொள்ளுப்பிட்டியில் உள்ள கெபிடல் டவர் சொகுசு வீடமைப்பு தொகுதியில் தலா 65 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு வீடுகளை ரமித ரம்புக்வெல்ல கொள்வனவு செய்ததாகச் சாட்சியமளிக்கப்பட்டது.

இந்தக் கொடுக்கல் வாங்கலின்போது, அரசாங்கத்துக்கு செலுத்தவேண்டிய வரித் தொகையைக் குறைப்பதற்காக, கொள்முதல் பத்திரத்தில் வீட்டின் பெறுமதியைக் குறைத்துக் குறிப்பிடுமாறு ரமித கோரியதாகச் சாட்சியாளர்கள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

வழக்கின் 2ஆவது சாட்சியாளரான மயில்வாகனம் விபுலானந்தன் என்பவர் சாட்சியமளிக்கையில், ராஜரட்ணம் குமாரசுவாமி என்பவரின் அதிகாரம் பெற்ற முகவராகத் தான் செயற்பட்டதாகவும், இந்த வீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் விஜேராம வீதியிலுள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலும் நாவலவில் உள்ள ரமித ரம்புக்வெல்லவின் வீட்டிலும் நடைபெற்றதாகத் தெரிவித்தார். இதற்கான பணத்தை வங்கி ஒன்றில் வைப்பிலிடச் சென்றபோது போதிய தகவல்கள் இல்லையென வங்கியினால் மறுப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கெபிடல் டவர் மேலாளர் அலுவலகத்தில் வைத்துப் பணம் கைமாற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கின் 3ஆவது சாட்சியாளரான தனியார் வங்கி முகாமைதயாளர் மதனி ஷானிகா சாட்சியமளிக்கையில், 65 மில்லியன் ரூபா பணத்தை வைப்பிலிடச் சட்டத்தரணி ஒருவருடன் 4 பேர் வங்கிக்கு வருகை தந்திருந்தனர். எனினும் அந்த பணம் ஈட்டப்பட்ட விதம் குறித்த போதிய ஆவணங்களை வழங்க அவர்கள் தவறியதால் வைப்பினை ஏற்கத் தான் மறுத்துவிட்டதாகவும் நீதிமன்றில் உறுதிப்படுத்தினார்.

2022 ஜனவரி முதல் 2023 செப்டம்பர் 14 வரையான காலப்பகுதியில், சுமார் 296 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களைச் சேர்த்துள்ள ரமித ரம்புக்வெல்ல, அதில் 275 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் எவ்வாறு ஈட்டப்பட்டன என்பதை வெளிப்படுத்தத் தவறியுள்ளார்.

அத்தோடு அமைச்சின் 4 வாகனங்களுக்கு முறையற்ற விதத்தில் எரிபொருள் கொடுப்பனவு பெற்றமை, கொள்ளுப்பிட்டி மற்றும் கேகாலையில் சொத்துக்களை வாங்கியமை போன்ற குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் 86 சாட்சியாளர்கள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணைக்காக 1, 5, 7 மற்றும் 9ஆம் இலக்கச் சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதுடன், இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.