யாழ்ப்பாணத்துக்கு வரும் சுற்றுலாவிகளின் வருகையைக் கருத்திற்கொண்டு, வணிகர்கள், உணவகங்கள், தங்குமிடங்கள் மற்றும் சுற்றுலா சேவை வழங்குநர்கள் தங்களை நவீன தொழில்நுட்பங்களுடன் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் "PayDigital Jaffna" விழிப்புணர்வு மற்றும் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (7) யாழ்ப்பாணம் காகில்ஸ் சதுக்க வளாகத்தில் நடைபெற்றது.
அதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவ்வாறு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இன்றைய உலகம் தொழில்நுட்பப் புரட்சியின் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், டிஜிட்டல் பொருளாதாரத்தின் இதயத் துடிப்பாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை விளங்குகின்றது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துவரும் வறுமை ஒழிப்பு, தூய்மையான இலங்கை மற்றும் டிஜிட்டலைசேஷன் ஆகிய மூன்று தேசியக் கொள்கைகளையும் மக்களின் அன்றாட வாழ்வுடன் இணைக்கும் ஒரு முக்கியமான செயல்முறையாக இந்த நிகழ்வு அமைகிறது.
தாள்கால நாணய முறையிலிருந்து திரவ நாணயமல்லாத பணப்பரிவர்த்தனை முறைக்கு உலகம் வேகமாக மாறிவரும் சூழலில், உலகத்துடன் போட்டியிட்டு முன்னேற விரும்பும் நாடாகவும் மாகாணமாகவும் நாம் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்பது வெறும் மாற்று வழிமுறை மட்டுமல்லாமல், வேகம், பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் நவீன பொருளாதாரக் கட்டமைப்பாகும்.
முறைகேடுகள் மற்றும் ஊழல்களைக் குறைத்து வரி ஒழுங்கை வலுப்படுத்துவதன் மூலம் 'தூய்மையான இலங்கை' என்ற தேசியக் கொள்கையை அடைய இது பெரிதும் உதவும்.
யாழ்ப்பாணத்துக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளின் வருகையைக் கருத்திற்கொண்டு, வணிகர்கள், உணவகங்கள், தங்குமிடங்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தங்களை நவீன தொழில்நுட்பங்களுடன் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.
சர்வதேச டிஜிட்டல் கட்டண முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சுற்றுலாவிகள் எந்தவிதப் பணப்பரிமாற்றச் சிரமமுமின்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் தெரிவித்தார்.
வடக்கில் சுற்றுலா சேவை வழங்குநர்கள் தம்மை நவீன தொழில்நுட்பங்களுடன் தகவமைத்துக்கொள்ள வேண்டும்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space