தற்போது வடக்கு மாகாணத்தின் வடகிழக்குத் திசையில் இருக்கும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி அரபிக்கடல் நோக்கி நகரத் தொடங்கும் வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில் தெற்குத் திசையில் நகர்ந்து பின்னர் தென்மேற்குத் திசையில் நகர்ந்து பாக்கு நீரிணை மற்றும் வடக்கு மாகாணத்தினை உள்ளடக்கி அரபிக் கடல் நோக்கி நகருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சுழற்சி இன்று புதன்கிழமை (21.10.2026) காலை மன்னார்த் தீவுகளுக்கு மிக அண்மையாக நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த மழை இடைவெளிகளுடன் கூடியதாக எதிர்வரும்- 23 ஆம் திகதி வரை வெள்ளிக்கிழமை வரை வடக்கு கிழக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு மாகாணங்களுக்குத் தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.    

இந்த மழையின் போது செறிவான இடி மின்னல்கள் இடம்பெறும் வாய்ப்புள்ளன. இடி, மின்னல்கள் இரண்டு பிரதான வகைகளில் நிகழும். முகில்களுக்கிடையில் ( கிடையாக- Horizontal) நிகழும் போது( Clouds to Clouds) எமக்கான பாதிப்புக்கள் குறைவு. முகிலுக்கும், தரை மேற்பரப்புக்கும் இடையில் ( குத்தாக- Vertical) நிகழும் போது ( Clouds to Ground) எமக்கான பாதிப்புக்கள் அதிகம். தற்போது நிகழ்வதும் எதிர்வரும்- 22 வரையும் மழை கிடைக்கும் போது நிகழும் இடிமின்னலும் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. இது பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது. 

img_6ad8377c1999b.jpg

எனவே, மக்கள் இதுதொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம். இந்த இடி மின்னல் நிகழும் போது மரங்களுக்கு கீழே நிற்க வேண்டாம். பரந்த வெளிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். திறந்த வாகனங்களில் ( மோட்டார்ச் சைக்கிள், சைக்கிள்) பயணம் செய்ய வேண்டாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.