புதுக்குடியிருப்பு - வள்ளிபுனத்தில் அமைந்துள்ள கெத்செமனே சுவிஷேச தேவாலயத்தின் ஊடாக இயங்கி வரும் 'காருண்யம்' மற்றும் 'இரக்கம்' ஆகிய சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர் தினக் கொண்டாட்டம் நேற்று திங்கட்கிழமை (05) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

“சிறுவர்களின் கனவுகளை வளர்ப்போம்; வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் அமைந்த இந்நிகழ்வில் 490 சிறுவர்கள் உற்சாகத்துடன் பங்கெடுத்தனர்.

காருண்யம் மற்றும் இரக்கம் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் பணிப்பாளர் போதகர் பி. செல்வநாயகம் தலைமையில், அதன் நிர்வாகச் செயலாளர் கு. அகிலன், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் தொடக்கத்தில், வருகை தந்த விருந்தினர்களும் சிறுவர்களும் பாண்ட் வாத்திய இசை முழங்க கௌரவமாக அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகளும், அவர்களை மகிழ்விக்கும் பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றன. இதில் பங்கேற்ற சிறுவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கி ஊக்களிக்கப்பட்டதோடு, சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ப. பரணிதரன் கலந்துகொண்டார்.

மேலும், விசேட விருந்தினர்களாக வள்ளிபுனம் கெத்செமனே சுவிஷேச தேவாலய நிறுவனர் போதகர் எஸ். பெரியசாமி, எல்ஷடாய் தேவாலயத்தின் போதகர் பிரேமமோகன், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பெண் உப பொலிஸ் பரிசோதகர் றுபேறூ, புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே. கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதம மேலாண்மை சேவை உத்தியோகத்தர் திருமதி தர்ஜினி, மு/மன்னாங்கண்டல் பாடசாலை அதிபர் எஸ். தினேஷ்குமார், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ். விஜயந்தி உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

திரளான சிறுவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்த இந்நிகழ்வு, சிறுவர்களின் தனித்துவமான திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் அவர்களின் மகிழ்ச்சியை உறுதிசெய்வதற்கும் சிறந்ததொரு தளமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.