உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நௌபர் மௌலலி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள போதும், அந்த தாக்குதலுக்கு முன்னதான வவுணதீவு தாக்குதலின் உண்மைகளை கண்டறியவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரான சூழ்ச்சிகள் தொடர்பிலும் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விசாரணைகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம் என  பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (28)  இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில்  பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது அரசாங்கம் இந்த அமைச்சை பொறுப்பேற்கும் போது பொலிஸ் திணைக்களத்திற்கு பொலிஸ்மா அதிபரொருவர் இருக்கவில்லை. இந்த அமைச்சின் கீழேயே குடிவரவு குடியகல்வு அமைச்சு இருக்கின்றது. ஆனால் இதற்கு கட்டுப்பாட்டாளர் நாயகமும் இருக்கவில்லை. இந்த நிறுவனங்கள் அனைத்தும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தன. அத்துடன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் அரசியல் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருந்தனர். தவறான செயற்பாடுகளுக்கும் இவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். முன்னாள் பொலிஸ்மா அதிபர் குண்டர் குழுக்களுடன் ஹோட்டல்களுக்கு தாக்குதல் நடத்திய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இவ்வாறான நிலைமையில் இருந்த அமைச்சை பொறுப்பேற்று சிறிது காலத்தில் ஒழுக்கமான பொலிஸ் அதிகாரிகளை உருவாக்க முடிந்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 1200 பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டனர். 4000க்கும் அதிகமானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொலிஸ் திணைக்களத்தை ஒழுக்கமான, செயற்பாட்டு ரீதியான பொலிஸாரை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்த அமைச்சுக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. இதில் போதைப் பொருளை கட்டுப்படுத்தல் என்பது பெரும் சவாலானதாக உள்ளது. இது தொடர்பில் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் 520,051 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளன. 36,811 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் மொத்த பெறுமதி 19,643 கோடி ரூபாவாகும். 519,470 பேர் இந்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் இந்த சமூகத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன. 2025ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 102 பேர் உயிரிழந்திருந்ததுடன், 2026ஆம் ஆண்டில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். நாங்கள் இந்த சம்பவங்களை 50 வீதத்தால் கட்டுப்படுத்தியுள்ளோம். அத்துடன் இந்த இரண்டு வருடக் காலங்களில் 4126 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களை சேர்ந்த 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 233 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை அறிவித்தல்களும், 92 பேருக்கு எதிராக நீல பிடியாணை உத்தரவுகளும் விடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 72 பேர் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.  

மேலும் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 43 பேர் வெளிநாடுகளில் எங்கு இருக்கின்றனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 17 பேர் டுபாயிலும் 14 பேர் இந்தியாவிலும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை கூடிய விரைவில் நாட்டுக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வெளிநாட்டவர்களால் இலங்கையில் நடத்திச் செல்லப்படும் மோசடி நிலையங்கள் தொடர்பான தகவல்களும் கிடைத்துள்ளன. இது தொடர்பில் நடத்தப்பட்ட 20 நடவடிக்கைகளில் 1000 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலக கும்பல் மற்றும் போதைப் பொருளை கட்டுப்படுத்தவும், விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸாருக்கான பாதுகாப்புக்காகவும் பலமான சட்டங்கள் அவசியமாகும். இதனாலேயே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள்  தொடர்பான சட்டமூலத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு ஆதரவான அரசாங்கமாகும். இதன்படி மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படாது என்பதனை கூறிக்கொள்கின்றோம்.

இதேவேளை நிதி மோசடிகள் தொடர்பில் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி சாட்சிகளை பெற்றுக்கொள்ளும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு தேவையான உதவிகளை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் இது தொடர்பான விசாரணைகள் பலப்படுத்தப்படும்.

 

அதேபோன்று கிழக்கு பல்கலைக்கழக ரவீந்திரநாத் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட 10 கொலைகள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட 17 பேர் சீஐடி விசாரணைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் தொடர்புடைய ராசீக் மொஹமட் என்பவரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரகீத் எக்னலிகொட கடத்தல் சம்பவம், 11 பேர் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை முகாம் நிலத்தடி சிறையில் வைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடக்கின்றன. அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நௌபர் மௌலலி உள்ளிட்ட 25 பேருக்கு எதிரான வழக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் வவுனதீவு தாக்குதலின் உண்மைகளை கண்டறிந்து வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்த தாக்குதல் தொடர்பில் ஏதாவது சூழ்ச்சிகள் இருந்ததா என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த விசாரணைகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. அந்த விசாரணைகளை விரைவில் நிறைவு செய்யவே எதிர்பார்க்கின்றோம். அந்த விசாரணைகள் சீஐடி ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.