தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு வவுனியா மாநகர சபை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து நடைபெற்ற இந்நிகழ்வில், பிரஜைகள் குழுவின் தலைவர் கோ. ராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு பிரதான ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மண்டபத்தில் கூடியிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தமது பிள்ளைகள் மற்றும் உறவுகளை நினைந்து கண்ணீர் மல்க சுடர்களேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கப் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.