விசாகப்பட்டினத்தில் 65 அடி உயர திரிசூலம்
Ad Space
Ad Space
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 65 அடி உயரத்தில் உடுக்கையுடன் கூடிய திரிசூலம் அமைக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரி மலைப்பகுதி பிரபல சுற்றுலா தலமாகும். இங்குள்ள சிவன், பார்வதி சிலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்கள் மற்றும் கோடை விடுமுறையில் இங்கு அதிக சுற்றுலாப் பயணிகளை காணலாம்.
இந்நிலையில் இப்பகுதியை மேலும் அழகாக்க, விசாகப்பட்டினம் நகர வளர்ச்சி கழகம் (விஎம்ஆர்டிஏ) இங்கு 65 அடி உயரத்தில் உடுக்கையுடன் கூடிய திரிசூலம் சிலை அமைக்க முடிவு செய்தது. இதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று, சமீபத்தில் அமைச்சர் நாராயணா பூஜைகள் நடத்தி திரிசூலத்தை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வந்தார். மலை உச்சியில் உள்ள இந்த திரிசூலத்தை நகரில் எந்த இடத்தில் இருந்தும் காண முடியும்.
இரவில் எல்இடி விளக்கு வெளிச்சத்தில் திரிசூலம் ஜொலிக்கிறது. 65 அடி உயரம் கொண்ட திரிசூலத்தில் உடுக்கை மட்டும் 18 அடி அகலமும், 10 அடி உயரமும் கொண்டுள்ளது. ரோப்-வே உள்ள இந்த மலைக்கு தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் வர தொடங்கி விட்டனர். சுமார் 8 மாதமாக திரிசூலம் கட்டுமானப் பணிகள் நடந்தன. சமீபத்தில் இதன் திறப்பு விழா நடந்து முடிந்துள்ளது.
இது குறித்து ஆந்திர கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் நேற்று சமூக வலைதளத்தில், "குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில் புனரமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை நாம் கொண்டாடும் இந்த வேளையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரியில் 65 அடி உயர திரிசூலம் அமைக்கப்பட்டிருப்பது ஆந்திராவுக்கு பெருமை தரும் விஷயமாகும். இது நமது இந்திய கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தையும் நாட்டுக்கு எடுத்துரைக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space