தேசிய டெங்கு தடுப்புப் பிரிவினால், டெங்கு நோய் பரவக் கூடிய அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்ட 74 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி, விசேட டெங்கு தடுப்பு வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை (09) ஆரம்பிக்கப்படவுள்ளது.
தேசிய டெங்கு தடுப்புப் பிரிவின் தகவல்படி, இந்த விசேட டெங்கு தடுப்பு வாரமானது நவம்பர் 14 ஆம் திகதி வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
குறிப்பிடப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள், கூட்டு டெங்கு பரிசோதனைக் குழுக்களை ஈடுபடுத்துதல், கைவிடப்பட்ட மற்றும் உரிமையற்ற இடங்களிலிருந்து நுளம்பு பெருகும் இடங்களை அகற்றுதல் ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாகப் பாடசாலைகள், அறநெறிப் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மதஸ்தலங்களிலும் விசேட சிரமதானப் பணிகள் நடத்தப்படவுள்ளன.
டெங்கு தடுப்பு வாரம் முழுவதும் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணித்து மேற்பார்வை செய்வதற்கு விசேட கட்டுப்பாட்டு அறையொன்றும் செயற்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பல அரசாங்க நிறுவனங்களும் அமைப்புகளும் தேசிய டெங்கு தடுப்புப் பிரிவுடன் இணைந்து கொள்ளவுள்ளன.
பொது நிர்வாக அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள், 'சுத்தமான இலங்கை' செயலகம், இலங்கை பொலிஸார், முப்படையினர் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஆகியவை இதில் அடங்குகின்றன.