ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை - மாவடிவேம்பு பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தின் போது, விபத்துக்குள்ளான வான் ஒன்றை தீயிட்டு எரித்த நான்கு பேருக்குத் தலா 3 வருட கடூழியச் சிறைத் தண்டனையும், மொத்தமாக ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று (20) தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 08ஆம் திகதி குருநாகலிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த சுமார் 66 இலட்சம் ரூபா பெறுமதியான வான் ஒன்று, வந்தாறுமூலை - மாவடிவேம்பு பகுதியில் நபர் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.

இதனையடுத்து, குறித்த வானை தீயிட்டு எரித்த குற்றச்சாட்டில் சித்தாண்டி மற்றும் வந்தாறுமூலை பிரதேசங்களைச் சேர்ந்த  நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர், இவ்வழக்கு 2016ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி குறித்த நால்வரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்.

இந்நிலையில், வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான தர்சிகா திருக்குமரநாதன் மற்றும் சதீஸ்காந்த் மோகன் ஆகியோர் இன்று மன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில், தண்டனைச் சட்டக்கோவையின் 32ஆம் மற்றும் 418ஆம் பிரிவுகளின் கீழ் 66 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்திற்குச் சேதம் விளைவித்த குற்றத்திற்காக, குற்றவாளிகள் நால்வருக்கும் தலா 3 வருட கடூழியச் சிறைத் தண்டனையும், தலா 25,000 ரூபா வீதம் மொத்தமாக ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.