இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய 2,330 பாரதூரமான விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, குறித்த விபத்துக்களில் சிக்கி 2,463 பேர் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியை உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய 2,330 விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு இதன்போது 2,463 பேர் உயிரிழந்துள்ளனர். மிஹிந்தலை, ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே நாளில் ஏழு பேர் உயிரிழந்தமை போன்று, சில விபத்துக்களில் பலர் உயிரிழக்க நேரிடும். மேலும் 5,868 பாரதூரமான விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில், அவற்றில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவோரில் சுமார் 50 பேர் வரை உயிர் பிளைப்பார்கள் என உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதற்கு மேலதிகமாக 7,070 சிறு விபத்துக்களும் 448 சொத்துகளுக்க சேதம் விளைவிக்கக் கூடிய விபத்துக்களும் பதிவாகியுள்ளன.
விபத்துக்களில் சிக்கிய 813 பாதசாரிகளாக உள்ளனர். குறிப்பாக 55, 60, 70 ,80 மற்றும் 85 ஆகிய வயதுக்கு இடைப்பட்ட பாதசாரிகளே அதிகளவில் விபத்துகளில் உயிரிழக்கின்றனர். கவனக்குறைவு மற்றும் அலட்சியமே இந்த விபத்துக்களுக்குப் பிரதான காரணமாகும். அத்தோடு தற்காலத்தில் மோட்டார் சைக்கிள்களே அதிகளவில் விபத்துக்குள்ளாகும் வாகனங்களாக உள்ளன. 876 விபத்துக்கள் சம்பவித்துள்ளதோடு மோட்டார் சைக்கில் பின்னால் பயணித்தவர்கள் 168 பேர் உட்பட ஏறக்குறைய 900 பேர் வரை மோட்டார் சைக்கிள் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். 165 துவிச்சக்கர வண்டி செலுத்துநர்களும், 190 சாரதிகள் மற்றும் 240 பயணிகளும் இவ்வாறு விபத்துக்களில் சிக்கியுள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இதுவரையான காலப்பகுதியில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய விபத்துக்கள் 11 ஆல் அதிகரித்துள்ள அதேநேரம், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16 குறைந்துள்ளது. எதிர்வரும் பண்டிகை மற்றும் டிசம்பர் விடுமுறைக் காலப்பகுதியில் வாகனங்களைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். பொலிஸார் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போதைப்பொருள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக சுற்றிவளைப்புகளை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம்.
பரிசோதிதனைக்க அவசியமான கருவிகளும் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், நடமாடும் ஆய்வகங்களை கொண்டு போதைப்பொருள் தொடர்பான பரிசோதனைகளையும் மேற்கொள்ளவுள்ளோம். விபத்துக்களின் பின்னரும் போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அனைத்து போக்குவரத்து உத்தியோகத்தர்களையும் கடமையில் ஈடுபடுத்தி விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து விபத்துக்களைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம். விபத்துக்களைத் தடுப்பதற்கும் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் எதிர்வரும் காலத்தில் போக்குவரத்துச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றார்.