இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு தொடர்பில் நாம் முறைமையொன்றை பின்பற்றி வருகின்றோம். அவர்களது படகுகள் தொடர்பிலும் நாம் முறைமையொன்றை பின்பற்றுகின்றோம். எவ்வாறெனினும் வெளிநாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்களில் நாம் கை வைக்க முடியாது. வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களை விடுவிப்பதற்கு நாம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் என கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது அதனை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நாம் இந்திய மீனவரின் படகுகளை கைப்பற்றுகின்றோம். அது தொடர்பில் நாம் பின்பற்றும் முறைமை ஒன்று உள்ளது. அதேபோன்று சிசெல்ஸ் நாட்டில் அண்மையில் அது தொடர்பில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கிணங்க அந்த நாட்டின் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் படகுகள் உடனடியாகவே கடலில் மூழ்கடிக்கப்படும். அந்த படகுகளில் எரிபொருள் இருப்பதால் சூழலுக்கு ஏற்படும் மாசை தவிர்ப்பதற்காக படகை எரித்து அவ்வாறு கடலில் மூழ்கடிக்கும் திட்டம் அங்கு காணப்படுகிறது.
வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களை விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். அந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்களில் நாம் கை வைக்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் நாட்டின் ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க சேற்று நண்டு வளங்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். மீனவர்களின் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மீன்வளம் மற்றும் நீர்வாழ் வள சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சேற்று நண்டுகள் மீதான விதிமுறைகள் மீதும் இந்தச் சட்டம் கவனம் செலுத்தியுள்ளது.
சேற்று நண்டுகளைப் பிடிப்பது தொடர்பாக நாடு தழுவிய விதி முறை அவசியம். கடந்த காலங்களில், சேற்று நண்டுகளைப் பிடிப்பது தொடர்பாக பல்வேறு வாத விவாதங்கள் காணப்பட்டன.
அதற்கு இணங்க, நாரா நிறுவனம் இதற்கான குறிப்பிட்ட விதிமுறைகளைத் தயாரித்துள்ளது. அது தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகளும் கிடைத்து வருகின்றன.குஞ்சுகள் உட்பட சிறிய நண்டுகள் பிடிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் வந்துள்ளன. இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இது தொடர்பாக வெளிநாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நாம் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளுக்கு எமது மீன், நண்டுகளைஏற்றுமதி செய்கின்றோம். கடந்த காலத்தில், இந்த விதிமுறைகளை மீறும் பின்னணி இருந்தது. அதன்படி, நண்டுகளின் சுற்றளவு 120 மில்லி மீட்டர்களாகக் கணக்கிடப்பட்டது. அந்த விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
நண்டுகளுக்கு மட்டுமல்ல, மீன்களுக்கு தீங்கு விளைவித்தால், முறையான விதிமுறைகளுக்கு எதிராக மீன்பிடித்தால் அத்துடன் தடைசெய்யப்பட்ட வலைகள் மூலம் மீன்பிடித்தால் அவை ஏற்றுமதி செய்ய மறுக்கும் சூழ்நிலை உள்ளது.
இது தொடர்பாக இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் அதைப் பற்றி விவாதித்தோம்.
சேற்று நண்டுகள் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு பெரிதும் பங்களிக்கின்றன. அவற்றின் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். நண்டு வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கு தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என்றார்
வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space