கினிகத்தேனை - நாவலப்பிட்டி பிரதான வீதியில், அம்பகமுவை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று சிக்கிய நிலையில், அதனை இளைஞர்கள் சிலர் நீண்ட நேர முயற்சியின் பின்னர் மீட்டுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை (3) நாவலப்பிட்டியில் தொடர்ச்சியாக மழை பெய்ததோடு, அம்பகமுவை ஓயா வான்பாய்ந்ததால், அம்பகமுவை பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் பயணித்தபோது வெள்ளம் காரணமாக குறித்த பகுதியில் நகர முடியாமல் நின்றுள்ளது.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பஸ்ஸை அங்கிருந்து நகர்த்தி பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த முயற்சியில், அவ்விளைஞர்கள் லொறி ஒன்றின் ஊடாக பஸ்ஸினுள் இருந்த பயணிகளை மீட்டதோடு, கெப் ரக வாகனத்தைப் பயன்படுத்தி, இரு வாகனங்களுக்கும் இடையே கயிறு கட்டி, பஸ்ஸை அங்கிருந்து மீட்டுள்ளனர்.