22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எதிர்ப்புக்கு மத்தியில் மேலதிக 14 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று திங்கட்கிழமை (23) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமாரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாதீட்டைச் சமர்ப்பித்த தவிசாளர், சபையின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள், சோலைவரி உள்ளிட்ட நிதி உள்ளீர்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எடுத்துரைத்தார்.

அத்துடன், காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் பாதீட்டை நிறைவேற்றுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். 

இதனையடுத்து பாதீடு சபை விவாதத்துக்கு விடப்பட்ட நிலையில், உறுப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களையும் கருத்துக்களையும் முன்வைத்தனர்.

குறிப்பாக, மக்கள் நலனையும் தற்போதைய தேவைகளையும் கருத்தில் கொண்ட நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் பாதீட்டில் போதியளவில் உள்ளடக்கப்படவில்லை என்றும், மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படாத வகையில் முன்மொழிவுகள் அமைந்துள்ளதாகவும் எதிரணியினர் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் மக்களுக்கான ஒதுக்கீட்டின் பெறுமானம் ஏற்றுக்கொள்ளவகையில் அமையவில்லை என்றும் கூறி தேசிய மக்கள் சக்தி பாதீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை நிராகரித்தனர்.

தொடர்ந்து இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களின் பின்னர், பாதீட்டை நிறைவேற்றுவதற்காக தவிசாளர் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார்.

வாக்கெடுப்பில் பாதீட்டுக்கு ஆதரவாக 18 வாக்குகளும், எதிராக NPP யின் 4 வாக்குகளும் கிடைத்த நிலையில், மேலதிக 14 வாக்குகளால் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேலணை பிரதேச சபையின் 22 உறுப்பினர்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 4 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் பெற்றிருந்தன. 

அதேவேளை, சுயேச்சைக் குழுக்கள் 3 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் முன்னணி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.

இந்த உறுப்பினர் பலத்தின் பின்னணியில் வேலணை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.