கைது செய்யப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ச பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் அல்ல. அவர் எமது கட்சித் தலைவரின் மனைவி மற்றும் நாங்கள் மதிக்கும் ஒரு நபர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எந்தவொரு வழக்கு விசாரணையிலும் நாங்கள் ஒருபோதும் தலையிடுவதில்லை என்பதை நான் முதலாவதாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
நேற்றையதினம் இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர், நுகேகொடையில் உள்ள ஷிரந்தி ராஜபக்சவின் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கடந்த 24ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையிலேயே அந்த அறிவித்தல் வழங்கப்பட்டது.
அந்த நேரத்தில் தான் இரண்டு வாரங்களில் இலங்கை திரும்புவதாகவும், திரும்பிய பிறகு ஒரு திகதியை வழங்குமாறும், அவ்வாறு வழங்கப்படும் திகதியில் விசாரணைக்கு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கத் தயார் எனவும் ஷிரந்தி ராஜபக்ச அறிவித்திருந்தார்.
அதன்படி, அவர் நாடு திரும்பியதும் விசாரணைக்காக ஒரு திகதியும் கோரப்பட்டது.
எனினும், விசாரணைக்காக எந்தவொரு திகதியும் வழங்காமல், முன் அறிவிப்பு ஏதும் இன்றி, நாட்டை விட்டு ஓடப் பார்க்கும் ஒரு மோசடித் திருடனைப் பிடிக்கப் போவது போல, அதிகாலையிலேயே ஷிரந்தியின் வீட்டிருக்குச் சென்ற அதிகாரிகள் உடனடியாக அவரை கைது செய்தனர்.
விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைத்திருந்தால், நிச்சயமாக அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருப்பார். வீட்டிற்கு வருகைத் தந்து கைது செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை என நாங்கள் கருதுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர், “மகிந்த கஹந்தகம விவகாரத்தில், அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர் அல்ல என தெரிவித்திருந்தீர்கள். எதிர்காலத்தில் ஒருவேளை நாமல் ராஜபக்சவோ அல்லது ஷிரந்தி ராஜபக்சவோ தவறிழைத்தவர்களாக நிரூபிக்கப்பட்டால் அவர்களும் உங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல என கூறுவீர்களா..?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சாகர காரியவசம்,
“அப்படி இல்லை, நாமல் ராஜபக்ச எமது கட்சியைச் சேர்ந்தவர் என்று எங்களால் கூற முடியாது. அவர் எமது கட்சியின் தேசிய அமைப்பாளர்.
அதேபோல, ஷிரந்தி ராஜபக்ச எங்களது கட்சி தலைவரின் மனைவி. அவர் நேரடியாக கட்சியின் உறுப்பினராக இல்லாவிட்டாலும், ஜனாதிபதியின் மனைவியாக அவர் ஆற்றிய பணிகளுக்கும் எங்களது கட்சிக்கும் தொடர்பில்லை என்று கூறும் அளவுக்கு நாங்கள் சிறுபிள்ளைத்தனமான நிலைக்குச் செல்ல மாட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.