ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அருகே சுமார் 100 அகதிகளுடன் பயணித்த படகு நேற்று வெள்ளிக்கிழமை (27) விபத்துக்குள்ளானதில், ஆரம்பகட்ட தகவல்களின்படி குறைந்தது 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கேனரி தீவுகளில் உள்ள எல் ஹியெரோ (El Hierro) தீவுக்குத் தெற்கே சுமார் 39 கடல் மைல் (சுமார் 62-72 கி.மீ) தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த படகை ஸ்பெயின் கடல்சார் மீட்புப் படையினர் இடைமறித்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
உயிருடன் மீட்கப்பட்டவர்களில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த 6 பேர் ஹெலிகாப்டர் மூலம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
காம்பியாவிலிருந்து சுமார் 100 அகதிகளுடன் புறப்பட்ட இந்தப் படகு, 10 நாட்களாகக் கடலில் பயணித்துள்ளது. படகின் இயந்திரம் பழுதடைந்து 3 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில், மீட்புப் படையினரால் கண்டறியப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.