“தற்போது எம்எல்ஏவாகக் கூட இல்லாத அன்பில் மகேஸ், சாட்சிகளை, ஆதாரங்களை கலைத்துவிடுவதாக கிளிப்பிள்ளைக் கூறுவது போல் காவல் துறையினர் கூறி வருகின்றனர். ஆனால், சாட்சிகளை கலைப்பதாகக் கூற எந்த ஆதாரங்களும் இல்லை,” என்று ஜாமீன் கோரிய வழக்கில் அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி, லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த வழக்கில் அன்பில் மகேஸ், முத்துகுமார் மற்றும் சரவணன் ஆகிய மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனுவை காரணம்காட்டி ஜாமீனை மறுக்க முடியாது எனத் தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதி, ‘ஜாமீன் மனு எப்போது தாக்கல் செய்யப்பட்டது? காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனு எப்போது தாக்கல் செய்யப்பட்டது?’ எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் வில்சன், நவம்பர் 10-ம் தேதி ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டதாகவும், 18-ம் தேதி காவல் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டதாகவும், ஒருநாள் காவலில் எடுக்க அனுமதிக்கலாம் என தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், ஏற்கெனவே 30 நாட்கள் சிறையில் உள்ள அன்பில் மகேஸை, தொடர்ந்து நீதிமன்ற காவலில் சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், “தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பணப் பரிவர்த்தனைகள் நடந்ததற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. ஏற்கெனவே, கைதுக்கு முன் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி 8 மணி நேரமும், கைதுக்குப்பின் நவம்பர் 2 முதல் 4-ம் தேதி வரை 17 மணி நேரமும் என 25 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 18-ம் தேதிக்குப் பிறகு, முன்ஜாமீன் மனு தள்ளுபடியாகும் வரை அன்பில் மகேஸிடம் விசாரணை நடத்தப்படவில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்படும் ஒவ்வொருவருடனும், அன்பில் மகேஸை வைத்து விசாரிக்க வேண்டும் என கேட்க முடியாது. பள்ளிகளுக்கு 20 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக அரசு கொள்கை முடிவெடுத்து அரசாணை பிறப்பித்ததில் குற்றச்சதி என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் சங்கங்கள் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றதும், அதில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறியதும் குற்றச்சதி எனக்கூற முடியுமா? லஞ்சம் கொடுத்தவர்களை இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்க வேண்டும். அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்பில் மகேஸை எப்படி தண்டிக்க முடியும்?” என கேள்வி எழுப்பினார்

மேலும், “தற்போது எம்எல்ஏ-வாகக் கூட இல்லாத அன்பில் மகேஸ், சாட்சிகளை, ஆதாரங்களை கலைத்துவிடுவதாக கிளிப்பிள்ளைக் கூறுவது போல் காவல்துறையினர் கூறி வருகின்றனர். ஆட்சிமாற்றம் காரணமாக அரசியல் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் ஏற்கெனவே, விசாரணை, சோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் என்ன விசாரணை நடத்தப்படவுள்ளது.

‘சாட்சிகளைக் கலைத்தார்’ என்ற குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இதுவரை அன்பில் மகேஸ் வீட்டில் இருந்து எந்தப் பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை, அன்பில் மகேஸ் பணம் வசூலித்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. முன்ஜாமீன் மறுத்தபோது இருந்த சூழல் தற்போது இல்லை, என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.

அன்பில் மகேஸ் தரப்பு வாதம் முடிவடைந்ததையடுத்து, காவல்துறை தரப்பு வாதத்ததுக்காக விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.