“சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக ஒருபோதும் கூட்டணி இல்லை என திருமாவளவன் சொல்லியுள்ளார். எனவே, பாமக உள்ளே வந்தால், நாங்கள் வெளியே செல்வோம்” என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் நேற்று (அக்.11) நடந்த தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டின் தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “இந்தப் பதவி இருக்கும், இல்லாமல் போகும். எனக்கு அமைச்சர் பதவியை விட திருமாவளவன்தான் முக்கியம். விசிகதான் முக்கியம். தவெக கூட்டணிக்கு உள்ளே பாமக வந்தால் உங்கள் நிலை என்ன என்று பலரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். 10 ஆண்டுகளாக அதற்கு பதில் சொல்லி வாயும் வலிக்கிறது, கேட்டுக் கேட்டு காதும் வலிக்கிறது.

சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக ஒரு போதும் கூட்டணி இல்லை என திருமாவளவன் சொல்லியுள்ளார். எனவே, பாமக உள்ளே வந்தால், நாங்கள் வெளியே செல்வோம் என்பதுதான் அதனுடைய பிரகடனம்.

எங்களுக்கு பதவி முக்கியம் இல்லை. திருமாவளவன் கட்டளையிடும் பணியை செய்ய அடிமட்ட தொண்டராக இருந்து களமாடுகிறோம்.

விசிக தேர்தல் புறக்கணிப்பு பாதையில் நின்ற இயக்கம். எங்களுக்கு தேர்தல்கள் முக்கியமில்லை. அதிமுக, திமுக போல விசிக சராசரி கட்சி இல்லை. இது விடுதலை இயக்கம்” என்றார் அமைச்சர் வன்னி அரசு.