“நாங்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்” என்று ஈரான் ஜனாதிபதி பெசெஸ்கியன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் நேற்று புதன்கிழமை (23) கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (22) பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை, “பயங்கரவாத நாடு” என்று கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக ஈரான் ஜனாதிபதி மேலும் கூறுகையில்,
“அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எங்களை “பயங்கரவாதி” என்று வர்ணித்துள்ளார். நாங்கள் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள். எந்தவொரு சட்ட நடைமுறையோ அல்லது காரணமோ இன்றி, எங்களின் மதிப்பிற்குரிய உயரிய தலைவர் படுகொலை செய்யப்பட்ட ஈரானிலிருந்து நான் வருகிறேன்.
உண்மையில், ஒரு பாடசாலை மீதே குண்டு வீசப்பட்ட ஈரானிலிருந்து நான் வருகிறேன். இந்தக் குழந்தைகளைப் பார்க்கிறீர்களா? அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்களை கொண்ட குண்டுகளால் இந்தக் குழந்தைகள் உயிரிழந்தனர்.
எங்களது நாட்டின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்களுக்கு எங்களது அப்பாவி மக்கள் இலக்காகின்றனர். நாங்கள் மிகுந்த வலிமையுடன் எங்களைப் பாதுகாத்துக்கொண்டோம்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எங்கள் மீது தாக்குதல் நடத்தின. அவர்கள் எங்களைத் தாக்கினார்கள். ஆனால், நாங்கள் ஒருபோதும் மண்டியிடவில்லை.
நாங்கள் பதிலடி கொடுத்தோம். ஆனால், பொதுமக்களைத் தாக்கவில்லை.
காசாவில் 80,000க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தங்கள் வசமுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவர்கள் இனப்படுகொலையைச் செய்து வருகின்றனர். பின்னர், மற்றவர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.
நாங்களா நிலையற்ற தன்மைக்குக் காரணம்? நாங்கள் சுதந்திரமாக வாழவே விரும்புகிறோம்.
நாங்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக வேறொரு நாட்டின் மீதோ அல்லது பிரதேசத்தின் மீதோ தாக்குதல் நடத்தியதில்லை. ஆனால், அச்சுறுத்தல் ஏற்பட்டபோதெல்லாம் தொடர்ந்து தன்னை தற்காத்துக்கொண்டுள்ளது. பிராந்தியத்தில் நிலையற்ற தன்மைக்கு காரணமாகவும் பயங்கரவாத நாடாகவும் ஈரான் ஏன் இப்போது சித்திரிக்கப்படுகிறது.
ஈரான் தனது அதிகாரத்தை ஆதிக்கத்துக்காக பயன்படுத்தவோ அல்லது பிற நாடுகளின் நலனைப் பாதித்துத் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவோ விரும்பவில்லை” என்று ஈரான் ஜனாதிபதி தெரிவித்தார்.