ரூபாய் 10 கோடிக்கும் அதிக சந்தை மதிப்புடைய ஐஸ் போதைப்பொருள் தொகையை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்திச் சென்ற 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கோனஹேன விசேட அதிரடிப்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுமான பொடி சுரேஷ் மற்றும் சங்க சமீர ஆகியோரின் இலங்கையிலான போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும் பிரதான நபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று வெள்ளிக்கிழமை (19) கடவத்தை, புனித அந்திரேயா அவிலீனு தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் வைத்து இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 06 கிலோகிராம் 288 கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருளை அளவிடப் பயன்படுத்தப்படும் மின்னணு தராசு, கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் கணேமுல்ல - கேந்தலியத்தபாலுவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையையும் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.