கனடாவில் ஏற்கனவே தற்காலிகக் குடியிருப்பாளர்களாக வசித்து வரும் தகுதியுடைய 2 இலட்சம் பேருக்கு 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிரந்தர வதிவிட அனுமதி வழங்குவதற்கான புதிய குடியேற்றத் திட்டத்தை கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், ஏற்கனவே கனடாவில் வசித்து வரும் வெளிநாட்டினரைத் தக்கவைத்துக்கொள்வதையும், நிலுவையில் உள்ள குடியேற்ற விண்ணப்பங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் 2026ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டம் மற்றும் 2027–2029 குடியேற்ற மட்டத் திட்டத்தில் இந்த புதிய நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் தகவலின்படி, இந்தத் திட்டம் இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கனடாவில் ஏற்கனவே வசித்து வரும் தகுதியுடைய ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கும் அவர்களுடன் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் நிரந்தர வதிவிட அனுமதி பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதற்காக மாகாண மற்றும் பிராந்திய அரசாங்கங்களுடன் இணைந்து, அந்தந்தப் பகுதிகளின் தொழிலாளர் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப தகுதியுடைய தொழிலாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.
குறிப்பாக, மாகாண நியமனத் திட்டத்தின் கீழ் தகுதி பெறும் தொழிலாளர்களுக்கு இந்த நடவடிக்கை வாய்ப்புகளை வழங்கும்.
மேலும், அட்லாண்டிக் குடியேற்றத் திட்டம், ஸ்டார்ட்-அப் விசா திட்டம் (Start-up Visa Program), சுயதொழில் நபர்களுக்கான திட்டம், விவசாய உணவுத் துறை முன்னோடித் திட்டம் (Agri-Food Pilot) மற்றும் வீட்டு பராமரிப்புப் பணியாளர் திட்டங்கள் உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட குடியேற்றத் திட்டங்களின் கீழ் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள சிலரும் இதன் மூலம் பயனடையலாம்.
மீதமுள்ள ஒரு இலட்சம் இடங்கள் மனிதாபிமான அடிப்படையிலான விண்ணப்பதாரர்கள் மற்றும் குடும்ப மீளிணைப்பு தொடர்பான விண்ணப்பங்களுக்காக ஒதுக்கப்படவுள்ளன.
இதில் பல ஆண்டுகளாக நிரந்தர வதிவிட அனுமதிக்கான முடிவுக்காகக் காத்திருப்பவர்கள் உள்ளிட்ட தகுதியுடைய நபர்கள் கவனத்தில் கொள்ளப்படுவார்கள்.
குறிப்பாக, மனிதாபிமான மற்றும் கருணை அடிப்படையிலான விண்ணப்பங்கள் (Humanitarian and Compassionate Grounds), ஹொங்கொங் நிரந்தர வதிவிடப் பாதைகள், உக்ரைன் குடும்ப மீளிணைப்புப் பாதை மற்றும் கனேடிய குடிமக்கள் அல்லது நிரந்தர வதிவிட உரிமையாளர்களின் வாழ்க்கைத்துணை, பொதுவாழ்க்கைத் துணை மற்றும் சார்ந்திருக்கும் பிள்ளைகளுக்கான விண்ணப்பங்கள் இதில் உள்ளடங்குகின்றன.
இதற்கிடையில், கனடா அரசாங்கம் 2027 முதல் 2029 வரையான ஒவ்வொரு ஆண்டுக்கும் பின்வரும் குடியேற்ற இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
நிரந்தரக் குடியிருப்பாளர்கள் என்ற இலக்கிற்கு ஆண்டுக்கு 3 இலட்சத்து 80 ஆயிரம் பேரையும் புதிய தற்காலிகக் குடியிருப்பாளர்கள் என்ற இலக்கிற்கு ஆண்டுக்கு 3 இலட்சத்து 70 ஆயிரம் பேரென நிர்ணயித்துள்ளது.
இந்த 2 இலட்சம் பேருக்கான புதிய நிரந்தர வதிவிட நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக நான்கு ஆண்டுகளில் 302.3 மில்லியன் கனேடிய டொலர்களை ஒதுக்குவதற்கு 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வழக்கமான வருடாந்த நிரந்தரக் குடியிருப்பாளர் இலக்குகளுக்கு மேலதிகமான இடவசதியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் கனடாவில் வசிக்கும் அனைத்து தற்காலிகக் குடியிருப்பாளர்களுக்கும் தானாகவே நிரந்தர வதிவிட அனுமதி கிடைக்கும் என்று அர்த்தமல்ல.
சம்பந்தப்பட்ட குடியேற்றத் திட்டங்களின் தகைமை நிபந்தனைகளை விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், இந்த நடவடிக்கை முக்கியமாக ஏற்கனவே கனடாவில் வசித்து வரும் நபர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
கனடாவில் ஏற்கனவே குடியேறி, தொழில்புரிந்து, சமூகங்களுடன் இணைந்து வாழ்ந்து வரும் தகுதியுடைய நபர்களைத் தக்கவைத்துக்கொள்வதுடன், நாட்டின் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.