இலங்கையின் மின்சாரத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக, இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board - CEB ) உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டு, அதன் பணிகள் மற்றும் பொறுப்புகள் ஆறு தனித்தனி அரசுடைமை நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஞாயிற்றுக்கிழமை (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்ததாவது, இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டு, முந்தைய காலங்களில் இலங்கை மின்சார சபை மேற்கொண்ட பணிகளை மேற்கொள்ள ஆறு புதிய நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த வர்த்தமானி அறிவிப்பு 09 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்ததுடன், 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கம் இலங்கை மின்சார சபையின் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட 56 ஆண்டுகள் பழமையான மின்சார சபையின் செயல்பாடுகள் இத்துடன் நிறைவுக்கு வந்துள்ளன.
புதிய அமைப்பின் கீழ் மின்சாரத் துறையானது, மின்சார உற்பத்தி, மின்சார பரிமாற்றம், மின்சார விநியோகம், மின்சார அமைப்பு செயல்பாடுகள் எனப் பிரிக்கப்பட்டு, ஆறு தனித்தனி அரச நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும்.
இந்த மறுசீரமைப்பின் மூலம் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரம் சட்டத்தின் மீதமுள்ள பிரிவுகளும் அமுலுக்கு வந்துள்ளன. எனினும் சில குறிப்பிட்ட பிரிவுகள் மட்டும் தற்போது அமுல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும், தன்னார்வ ஓய்வு திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களைத் தவிர, புதிதாக நிறுவப்பட்ட ஆறு நிறுவனங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மார்ச் 10 முதல் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் தன்னார்வ ஓய்வு திட்டத்திற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் நேற்றைய தினம் நள்ளிரவு முதல் தங்களது பதவிகளில் இருந்து விலகியதாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்கான நலன்கள் பின்னர் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையுடன் இணைக்கப்பட்டிருந்த ஊடகப் பேச்சாளர் பதவியும் இனி அமுலில் இருக்காது. புதியதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனி ஊடகப் பேச்சாளர்களை நியமிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாட்டில் மின்சார உற்பத்தி அல்லது விநியோகத்தை பாதிக்காது என அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளனர்.
இதனுடன் லங்கா மின்சார நிறுவனம் (LECO) நிறுவனமும் புதிய அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட விநியோக நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையை பல அரச நிறுவனங்களாகப் பிரிப்பது, தெளிவுத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இலங்கை சுற்றுலா
இலங்கையின் மின்சாரத் துறையின் வரலாற்றில் மிகப்பெரிய மறுசீரமைப்புகளில் ஒன்றாக இந்த நடவடிக்கை கருதப்படுகின்றது. புதிய அமைப்பு மூலம் மின்சாரத் துறையின் நிர்வாகம் மேலும் சீரமைக்கப்பட்டு, திறன் மேம்படும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
56 ஆண்டுகள் பழமையான இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டது !
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space