சட்டவிரோதமாக ரி -56 ரக துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஓய்வுப் பெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பின்வத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை  (27) காலி வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோத டி- 56 ரக துப்பாக்கி அதற்கான மெகசின் 13 தோட்டாக்கள் 11 பயிற்சித் தோட்டாக்கள் இரும்பு வாள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

பின்வத்தை பகுதியைச் சேர்ந்த ‘பின்வத்த பொடி சுதுவா’ என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவராகக் கருதப்படும் ‘ஹத்துர தமித் தர்ஷன சில்வா’ என்பவருடன் சந்தேகநபர் நெருங்கிய தொடர்பை பேணி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அண்மையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ‘நதீகா’ எனப்படும் நபருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் பாணந்துறை பின்வத்தைப் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய நபர் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான பின்வத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.