வெலிமடைப் பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு நீதிமன்றம் 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையான ரூ. 255 ஐ விட, ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா (GR 11) அரிசியை 260 ரூபாக்கு விற்பனை செய்து, கிலோவுக்கு 5 ரூபா அதிகமாக அறவிடப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் 04 ஆம் திகதி, நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, அதிகாரி ஒருவர் குறித்த அங்காடியில் அரிசியைக் கொள்வனவு செய்து இம்முறைகேட்டை உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களுக்குக் கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற உரிமை மீறல்கள் குறித்து பொதுமக்கள் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யலாம்.