முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் ஜனாதிபதி செலவு தொடர்பான விடயதானத்தின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (21) உத்தரவிட்டது.
மேற்படி வழக்கு இன்று கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டப் போது அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட இவர், 2022 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி வரை அப்பதவியில் நீடித்திருந்தார். அதன்பின்னர், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த அதே காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தின் விசேட திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றி, ஜனாதிபதி செலவு தொடர்பான விடயதானத்தின் கீழ் இரு சம்பளங்களைப் பெற்றுக்கொண்டதாகவே இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி, அவர் ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் 19 இலட்சத்து 33 ஆயிரத்து 65 ரூபாவையும் (1,933,065), திட்டப் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றிய காலத்தில் 42 இலட்சத்து 26 ஆயிரத்து 884 ரூபா 59 சதத்தையும் (4,226,884.59) முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுகீஸ்வர பண்டார குறித்த பதவிகளை வகித்த போது, அரச வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் அங்குள்ள ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பிலும், தண்டனைச் சட்டக்கோவை மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் 5(1) ஆம் பிரிவின் கீழ் தண்டனை பெறப்பட வேண்டிய குற்றங்களைப் புரிந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான சுகீஸ்வர பண்டார, வழக்கு விசாரணைக்காக நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது மன்றில் முன்வைக்கப்பட்ட இருதரப்பு சாட்ச்சியங்களையும் பரிசீலித்த நீதிவான், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.