இலங்கையின் தேசிய அனர்த்த முகாமைத்துவத் திறன்களை அதிகரிப்பதுடன், அவசர காலங்களில் அரச மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஆரம்பத் திட்டக் குழுக் கூட்டம் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
அனர்த்த தணிப்பு, முன்னாயத்தம், விரைவான பதிலளிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்குத் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் அவசியத்தை இக்கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அஸ{ஸா குபோடா மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் விர்ஜினி லேஃப்ளர்-டைக் ஆகியோர் கலந்துகொண்டனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் பணிப்பாளர் நாயகங்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
நீர்ப்பாசனத் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம், பொது நிர்வாக அமைச்சு, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம், 'சிறுவர்களை பாதுகாப்போம்" அமைப்பு மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
இயற்கை மற்றும் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்வதில் நிறுவனங்களின் தயார்நிலையை மேம்படுத்துவதும், பாதிப்புகளைக் குறைப்பதற்கான வேலைத்திட்டங்களை அதிவிரைவாகச் செயல்படுத்துவதுமே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.