வட மாகாணத்தில் தொழில் துறை வளர்ச்சியை விரைவுபடுத்தவும் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் இலங்கை முதலீட்டுச் சபை பிரத்தியேக வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக, கிளிநொச்சி - பரந்தன் மற்றும் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் புதிய ஏற்றுமதி முறைவழி மண்டலங்களை அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்த ஹூலங்கமுவ மற்றும் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுலக்ஷண ஜெயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் வட மாகாணத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டு, ஆளுநர், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நடத்திய உயர்மட்டக் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பரந்தன் கைத்தொழில் மண்டலத்திற்காக முதலீட்டாளர்களுக்கு காணிகளை ஒதுக்கும் நடவடிக்கை நவம்பர் இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும். இரு மண்டலங்களினதும் உள் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் 2027 ஜனவரி முதல் வாரத்தில் ஒரே நேரத்தில் தொடங்கப்படும்.

வடக்கில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் புதிய கைத்தொழில் மண்டலங்களை நேரில் பார்வையிடுவதற்காக முன்னணி முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுக்கு நவம்பரில் சிறப்பு கள விஜயம் ஒன்று ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

அரச நிறுவனங்களிடமிருந்து அனுமதிகளை விரைவாகப் பெறுவதற்கும், முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் முதலீட்டுச் சபைத் தலைவரால் இந்த ஒருங்கிணைந்த பொறிமுறை யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் உள்ள தகுதியான தொழிலாளர்களின் திறன்கள் மற்றும் விபரங்களை உள்ளடக்கிய 'பணிப்படைத் தரவுத்தளம்' உருவாக்கப்படவுள்ளது. இது முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்குப் பெரிதும் உதவும்.

யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியில் முன்னெடுக்கப்படும் அட்டை மற்றும் கடற்பாசி வளர்ப்புத் திட்டங்களை வணிக ரீதியில் விரிவுபடுத்தி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட தொழில்களாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தையும் சந்தித்த முதலீட்டுச் சபையின் பிரதிநிதிகள், இத்திட்டங்களின் கால எல்லைகள் குறித்து தெளிவுபடுத்தியதுடன், முதலீட்டாளர்களுக்கான வசதி மையத்தை வடக்கில் நிறுவுவதற்கும் கோரிக்கை விடுத்தனர். இத்திட்டங்கள் மூலம் வட மாகாணத்தில் நிலையான வேலைவாய்ப்புகளும் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.