தரமற்ற நிலக்கரியை கொள்வனவு செய்து அரசுக்கு 1000 கோடி ரூபா நட்டத்தை ஏற்பபடுத்திய நபருக்கு பிணையளிக்கப்பட்டுள்ளது, 4 லீற்றர் டீசலை தம்வசம் வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இன்றைய சட்ட நிலைமை. ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியையும், ஊழல்வாதிகளையும் ஜனாதிபதி பாதுகாக்கிறார். நெருக்கடியான நிலைமையை முகாமைத்துவம் செய்யும் திறன் அரசாங்கத்துக்கு கிடையாது. மக்கள் மீது ஒட்டுமொத்த சுமையையும் திணிக்கும் அரசாங்கத்துக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன அழைப்பு விடுத்தார்.

கொழும்பில் புதன்கிழமை (01) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மின்கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரித்து அரசாங்கம் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசளித்துள்ளது.எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு இன்னும் நிறைய பரிசுகள் கிடைக்கப்பெறும்.

நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற  ஊழல் மோசடியால் தான் தற்போது மின்கட்டணம் உயர்வடைந்துள்ளது. அதேபோல் மின்விநியோக துண்டிப்பையும் அமுல்படுத்த நேரிட்டுள்ளது.

ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிடும் ஜனாதிபதி ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியையும், ஊழல் அதிகாரிகளையும் பாதுகாக்கிறார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும்  மோதலை குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் நிலக்கரி மோசடியை மூடிமறைக்க மறைக்க முயற்சிக்கிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீது நம்பிக்கை கொண்டு தான் மக்கள் 159 உறுப்பினர்களை தெரிவு செய்தார்கள். ஆனால் இன்று அந்த நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது.

தரமற்ற நிலக்கரியை கொள்வனவு செய்து அரசுக்கு 1000 கோடி ரூபா நட்டத்தை ஏற்பபடுத்திய நபருக்கு பிணையளிக்கப்பட்டுள்ளது, 4 லீற்றர் டீசலை தம்வசம் வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.இதுதான் இன்றைய சட்ட நிலைமை.

பூகோள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா,அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகள் எரிபொருள் மீதான வரியை நீக்கி மக்களுக்கு நிவாரணமளித்துள்ளது.இவ்வாறான தீர்மானங்கள் ஊடாக தான் நடுத்தர மக்களை பாதுகாக்க முடியும்.ஆனால் இந்த அரசாங்கம் இதுவரையில் அவ்வாறான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

வலுசக்தி முகாமைத்துவத்துக்காக தற்போது பல வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் வீதி மின் விளக்குகளை அணைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலுக்கு சென்றவர்கள் இரவு வேளையில் எவ்வாறு வீட்டுக்குச் செலவார்கள்.கொள்ளையடிப்பவர்களுக்கு சாதகமான சூழலையே அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நகை கொள்ளையர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் கிடையாது.

தற்போதைய நெருக்கடியான நிலையில் மக்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமையால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் சாம்பியாவுக்கு அடுத்தப்படியாக உள்ளோம்.

நெருக்கடியான நிலைமையை முகாமைத்துவம் செய்யும் திறன் அரசாங்கத்துக்கு கிடையாது. மக்கள் மீது ஒட்டுமொத்த சுமையையும் திணிக்கும் அரசாங்கத்துக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.