தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்ததாகக் கூறப்படும் முறைமை மாற்றம் என்பது நாட்டை அடியோடு அதலபாதாளத்திற்கே கொண்டு சென்றுள்ளதுடன் குற்றவாளிகளுக்கு சிறைச்சாலைக்குள் கேக் ஊட்டும் ஒரு கேவலமான கலாச்சாரத்தை அநுர ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளதாக மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி தம்மரத்ன தேரர் குற்றச்சாட்டியுள்ளார்.

மிஹிந்தலையில்  புதன்கிழமை (01)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்.

நாட்டில் இன்று சட்டமும் ஒழுங்கும் முற்றாக சீர்குலைந்துள்ள நிலையை காண முடிகின்றது. ஜெனரல் சலே போன்றவர்கள் உரிய வசதிகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மறுபுறம் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் சிறையில் இருப்பவர்களுக்கும் மனிதாபிமானம் என்ற போர்வையில் கேக் ஊட்டி பிறந்தநாள் கொண்டாடும் விசித்திரமான கலாச்சாரம் ஒன்றை இந்த அரசாங்கம் சிறைச்சாலைக்குள் உருவாக்கியுள்ளது.

நிதி குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் போன்ற நிறுவனங்கள் இன்று சட்டத்தை நிலைநாட்டுவதை விடுத்து குற்றவாளிகளுக்கு கேக் ஊட்டும் இடங்களாக மாறியுள்ளன. பொலிஸ் திணைக்களம் தனது பொறுப்புகளை மறந்து செயற்படுவதுடன் சட்டத்தை வளைத்து திருடர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் சாதகமாக தற்போதைய ஆட்சியாளர்கள் களம் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

முன்னைய காலங்களில் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த தலைவர்களைப் விட விடுதலைப் பந்தை வழங்கிய தந்தை நிழல் தந்த தந்தை யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தந்தை எனப் பலரை மக்கள் போற்றினர். ஆனால் இன்று நிலக்கரியைக் கொண்டு வந்த தந்தை வியாபாரத் தந்தை எனப் பல பெயர்களில் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றும் கூட்டமே ஆட்சியதிகாரத்தில் உள்ளது. தற்போதைய ஆட்சியாளர்கள் பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கை தொடர்பான விடயங்களைச் சட்டப்பூர்வமாக்கி கல்வியைச் சீரழிப்பதுடன் மகா சங்கத்தினரை வனசாரிகள் என அவமதிக்கின்றனர்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கொவிட் உலகளாவிய நெருக்கடியின் போது மக்களுக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்கப்பட்டதுடன் அத்தியாவசியப் பொருட்களும் மருந்துப் பொருட்களும் வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்கப்பட்டன. ஆனால் இன்று முறைமை மாற்றம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களைப் பட்டினியில் வாட விட்டுள்ளனர். பாண் அல்ல இன்று உண்பதற்குப் புற்கள் கூட இல்லாத வறண்ட நிலையை நாடு எதிர்நோக்கியுள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகியுள்ள போதும் தேர்தல் காலத்தில் அறுநூறு ரூபாய் மின்சாரப் பட்டியலை இருநூறு ரூபாயாகக் குறைப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

சமூக வலைதளங்களில் செயற்படும் முகநூல் மற்றும் யூடியூப் தளத்தினர் தற்போதைய அரசாங்கத்தின் கைப்பாவைகளாக மாறி அரசாங்கத்திடம் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு நாட்டின் கலாச்சாரம் மற்றும் மத விழுமியங்களைச் சீரழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மதத் தலைவர்களைப் பகிரங்கமாக அவமதிக்கும் போக்கு இன்று அதிகரித்துள்ளதுடன் பொலிஸார் இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளமை கவலைக்குரியது. இந்த நாட்டை இந்த இழிவான நிலையில் இருந்து மீட்டெடுக்க வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும். ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற தாய்மார்களும் தந்தைமார்களும் விழிப்புடன் எழுச்சியடைய வேண்டிய காலம் வந்துள்ளது என்றார்.