அரச பயங்கரவாத இயந்திரம் தமிழர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் காலத்திலும் தமது வன்முகத்தை காட்டி நிற்கிறது என கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாற்றம் எனும் தொனியோடு ஆட்சிபீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணியினர் அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட தமது இயக்க உறுப்பினர்களுக்கு வருடந்தோறும் தெற்கில் நினைவு நிகழ்வுகள் பெருமெடுப்பில் நிகழ்த்துகையில் அதே அரச பயங்கரவாத இனவாத கட்டமைப்பு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்காக தெற்கில் நினைவேந்தல் நடத்துபவர்களையும் அந்நினைவுகளில் வளவாளர்களாக கலந்துகொண்டவர்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர்ந்து விசாரணை என அழைப்பது அரச பயங்கரவாத இயந்திரம் தமிழர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் காலத்திலும் தமது வன்முகத்தை காட்டி நிற்கிறது. இதனை கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் வன்மையாக கண்டிப்பதோடு நினைவேந்தல் சுதந்திரத்துக்கு எதிரான செயற்பாட்டினை நிறுத்துமாறும் கோரிக்கை விடுகின்றது.

கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் 2010ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் முள்ளிவாய்க்கால் நிறைவேந்தலை இனவாத கும்பல்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தெற்கில் நடத்தி வருகின்றது.

அந்த வகையில் கடந்த வருடம் (2025) நீர்கொழும்பில் நினைவேந்தல் நடத்தியபோது இனவாத கும்பல் எதிர்ப்பினை நிகழ்த்த திரண்டதோடு நிகழ்வுக்குள் பொலிஸாரும் நுழைந்து பதட்ட நிலையை ஏற்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் ஒழுங்கு செய்த கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அருட்சகோதரி ஒருவரும், அருட்தந்தை ஒருவரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இது எமது அமைப்புக்கு விடுக்கப்பட்ட இனவாத அடக்குமுறை அச்சுறுத்தலாகவே கருதுகின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது அந்நிகழ்வில் வளவாளராக கலந்துகொண்ட பன்னாட்டு குற்றங்கள் நூலின் ஆசிரியர் சிரிஞானேஸ்வரன் அவர்களை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் (CTID) அழைத்திருப்பது அச்சுறுத்தலின் அடுத்த கட்டம் எனலாம்.

தெற்கில் சிங்கள இளைஞர்கள் அரசுக்கு எதிராக 1971 மற்றும் 1988/ 89களில் நிகழ்த்திய கிளர்ச்சியினை அடக்க அரச  பயங்கரவாதம் திட்டமிட்ட வகையில் சித்திரவதை முகாம்களுக்குள் பெருந்தொகையான இளைஞர்களை சித்திரவதைக்கு உட்படுத்தி  படுகொலைகளை செய்தது. அது மட்டுமல்ல,  சமூக புதைகளுக்குள்ளும் தள்ளியது. இத்தகைய கிளர்ச்சி இனியும் நிகழாதிருக்க வடக்கு  கிழக்கின் அரசியல் எழுச்சியை பயங்கரவாதமாகவும், பிரிவினைவாதமாகவும், தேசத் துரோகமாகவும் அடையாளப்படுத்தி சிங்கள இளைஞர்களின் மூளையை சலவை செய்து அவர்கள் கைகளில் ஆயுதத்தை திணித்து இன அழிப்பையும் இனப்படுகொலையையும் அரங்கேற்றி வெற்றிக் கொண்டாட்டம் நடத்துகின்றது.

அது மட்டுமல்ல அரசு பயங்கரவாதம் தெற்கில் கடந்த காலத்தில் அது நிகழ்த்திய கோரத் தாண்டவத்தையும் அதன் வலிகளையும் மறைப்பதற்காகவே தொடர்ந்து இனவாதம் பயங்கரவாதம் என்பவற்றையெல்லாம் திட்டமிட்டு பரப்பிக்கொண்டு வரும் சூழ்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை தெற்கில் நடத்துவதன் மூலம் அரச பயங்கரத்தின் முகம் வெளிப்பட்டுவிடும். வடக்கின் மக்கள் நீதி குரல் எழுப்புவது போல தெற்கின் மக்களும் நீதி குரல் எழுப்புவர் என தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயன்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அதற்குப் பின்னால் இருக்கின்ற முதலாளித்துவ பேரினவாத கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்துவதை தடை செய்வதன் ஓர் அங்கமாகவே தற்போது பல்வேறு மட்டங்களில் விசாரணைகளை முடுக்கி விடுகின்றனர்.

எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் கருத்து வளவாளர்கள் போன்றோரை எல்லாம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு என அழைப்பது அடக்கப்படும் மக்கள்  சிந்திப்பதையும் ஒடுக்குதலுக்கு எதிராக ஒன்றுபடுவதை தடுப்பதற்காகவுமே ஆகும்.

இந்நிலையில் தெற்கின் முற்போக்கு சக்திகள் கடந்த கால அரச பயங்கரவாதத்தின் செயற்பாடுகள் தொடர்புடைய சித்திரவதை முகாம்கள், சமூக புதைகுழிகள் என்பவற்றுக்கான நீதியைத் தேடும் முகமாக மக்கள் மத்தியில் கலந்துரையாடல்களை ஆரம்பித்தால் மட்டுமே வடக்கில் அரச பயங்கரவாதத்தின் முகத்தினையும் அது நிகழ்த்திய கொடூரத்தையும் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

அத்தோடு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்கின்றோம். இன்று கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்துக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் எடுக்கும் அடக்குமுறை செயற்பாடுகள் தெற்கில் ஏனைய அமைப்புக்களுக்கு எதிராகவும் அது விரிவடையும் என்பதையும் நினைவுறுத்த விரும்புகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.