மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த அதிமுக பெண் வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள்கள், செய்தித் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி கடந்த 11-ம் தேதி டிஜிபியிடம் அளிக்கப்பட்ட மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

குற்றம் நடந்ததாக நான் கூறவில்லை. ஆனால், எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றுதான் கோருகிறேன். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் எந்தவித வெளிப்புற அழுத்தத்துக்கும் ஆட்படாமல் நியாயமான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக பெண் மாவட்ட ஆட்சியரின் கண்ணியம் மற்றும் மரியாதையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகாரளிக்க வேண்டும் என காத்திருக்காமல் பொது வெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும்.

இந்த வழக்கில் தொடர்புடைய மின்னனு ஆதாரங்களை காவல் துறை பாதுகாக்க உரிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.

எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கும் உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.