அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவு விபத்தில் மாயமான 'லூலூ' (Lulu) என்ற நாய்க்குட்டி, தொடர்ச்சியான 50 மணி நேரத் தீவிர தேடுதலுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்பட்ட இந்த அதிரடி மீட்பு நடவடிக்கை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அலாஸ்காவைச் சேர்ந்தவர் லாரன் படாவர் இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு பூடில் மற்றும் ஹஸ்கி இனத்தைச் சேர்ந்த 'லூலூ' என்ற பெண் நாய்க்குட்டியைத் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், லாரன் தனது தந்தையின் 80-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வெளிநாடு சென்றிருந்தபோது, நாய்க்குட்டியைப் பராமரிக்கும் பொறுப்பை தனது காதலர் மற்றும் அவரது நண்பரிடம் விட்டுச் சென்றுள்ளார்.
அப்போது அவர்கள், அலாஸ்காவின் புகழ்பெற்ற சூகாக் மாநிலப் பூங்கா பகுதியில் அமைந்துள்ள மலையேற்றப் பகுதிக்கு லூலூ நாய்க்குட்டியையும் உடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரெனப் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் சுமார் 500 அடி ஆழத்திற்கு கீழே அடித்துச் செல்லப்பட்டு படுகாயமடைந்தனர்.
அதிர்ஷ்டவசமாக இருவரும் கடுமையான காயங்களுடன் உயிர்பيழைத்தனர். எனினும், அவர்களுடன் சென்ற லூலூ நாய்க்குட்டி பனிவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானது.
வெளிநாட்டிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட தேடுதல் வேட்டைவெளிநாட்டில் இருந்தபடியே காதலர் மூலம் தகவலறிந்த லாரன் கடும் அதிர்ச்சியடைந்தார். உடனே சமூக வலைதளங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் மூலம் மீட்புப் பணிகளை அவர் தீவிரப்படுத்தியுள்ளார்.
அலாஸ்கா பனிச்சறுக்கு பகுதியில் உள்ள நான்கு மீட்புக்குழுக்கள், இரண்டு நடைபயணக் குழுக்கள், ஒரு பனிச்சரிவு குழு, ஒரு மலையேறும் குழு மற்றும் ஒரு பனிச்சறுக்கு சாகசக் குழு எனப் பல தரப்பினரும் களத்தில் இறங்கினர். மோப்ப நாய் படை உட்பட 20-க்கும் மேற்பட்டோர் தரைவழித் தேடுதலில் ஈடுபட்டனர்.
தொழில்நுட்பமும் சாதனையும் ஹஸ்கி மற்றும் பூடில் கலப்பினம் என்பதால் கடுமையான குளிரைத் தாங்கும் உடல்வாகைக் கொண்டிருந்தது லூலூ. இதற்கிடையே, மீட்புக் குழுவினர் நாயின் கழுத்தில் இருந்த ஆப்பிள் ஏர்டேக் (Apple AirTag) மற்றும் செயற்கைக்கோள் செயலி சிக்னல் உதவியுடன் அதன் துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறிந்தனர்.
விபத்து நடந்து சுமார் 50 மணி நேரத்திற்குப் பிறகு, வான்வழி மற்றும் தரைவழி மீட்புக் குழுவினர் நடத்திய தீவிர தேடுதலில் லூலூ உறைந்த பனிப்பிரதேசத்தில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறிய காயங்கள் தவிர பெரிதும் பாதிக்கப்படாமல் மீட்கப்பட்ட இந்த நாய்க்குட்டி, தற்போது பத்திரமாக மீட்கப்பட்டு தனது உரிமையாளரிடம் சேர்க்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பமும் மனித முயற்சியும் இணைந்து ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ள இந்தச் சம்பவம் விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
