அஹூங்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகந்தை பகுதியில் இனந்தெரியாத சந்தேகநபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், தற்போது சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாள குழு உறுப்பினர் என அறியப்படும் அஹூங்கல லொக்கு பெட்டியின் சகோதரர் பொடி பெட்டி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஹூங்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகந்தை பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதியன்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 34 வயதுடைய வெலிகந்தைப் பகுதியைச் சேர்ந்த லந்துவாஹந்தி சுகத் நுவன் குமார த சில்வா எனும் 'பொடி பெட்டி' என்பவரே இவ்வாறு  உயிரிழந்தார். 

இந்நிலையில், இந்தக் கொலைச் சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய  28 வயதுடைய வெலிகந்தைப் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் அஹூங்கல்ல பொலிஸாரால்  நேற்று  (07) புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹூங்கல பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.