முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து அவர்களால் பாதிக்கப்பட்ட பலர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் முகநூல் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஷிரந்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக செய்தி வெளியாகியவுடன் சரத் பொன்சேகா தனது மனைவியின் புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
2010ஆம் ஆண்டு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, அப்போதைய ஆட்சியாளர்களான ராஜபக்சர்களால் வலுக்கட்டாயமாக சிறையில் அடைக்கப்பட்டார்.

வெலிக்கடை சிறையில் பொன்சேகா அடைக்கப்பட்டிருந்த போது, அவரை காண சிறைக்கு வந்த அனோமா பொன்சேகாவின் புகைப்படத்தை அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
2012ஆம் ஆண்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர் விடுவிக்கப்படும் வரை அனோமா பொன்சேகா தனது கணவரின் விடுதலைக்காக தீவிரமாக போராடியிருந்தார்.

இந்த நிலையில் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு “விளக்கவுரை தேவையில்லை” என குறிப்பொன்றையும் பதிவிட்டிருந்தார்.
பொன்சேகாவின் பதிவு அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருவதுடன், கர்மாவை யாரும் வெல்ல முடியாது, பொன்சேகாவுக்கு நடந்த அநீதிக்கு பதில் இன்று கிடைத்து விட்டதென பதிவிட்டுள்ளனர்.